குடும்பத்தகராறில் ஆயுதப்படை போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை

திருப்பூரில் குடும்பத்தகராறில் ஆயுதப்படை போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருப்பூரில் குடும்பத்தகராறில் ஆயுதப்படை போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
ஆயுதப்படை போலீஸ்காரர்
தேனி மாவட்டம் சுருளிபட்டியை சேர்ந்த காமயன் என்பவரின் மகன் ஈஸ்வரன் (வயது 33). இவர் கடந்த 2016-ம் ஆண்டு பழனி தாசிகாணி பகுதியில் ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணியில் சேர்ந்தார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூர் மாவட்ட ஆயுதப்படையில் பணியில் சேர்ந்திருந்தார். தற்போது இவர் பயிற்சி காவலர்களுக்கு உணவு அளிக்கும் அலுவலகத்தில் பணியாற்றி வந்தார்.
இவர் மற்றும் இவரது மனைவி சர்மிளா (28) மகள் தனியாஸ்திரி (4) ஆகியோருடன் நல்லூர் ஆயுதப்படை குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தார். கடந்த ஒரு வருடமாக கணவன்-மனைவிக்கிடையே குடும்பத் தகராறு இருந்து வந்ததாக தெரிகிறது.
தூக்குப்போட்டு தற்கொலை
இந்நிலையில் நேற்று மதியம் பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்றபோது மீண்டும் கணவன் மனைவிக்கு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மிகுந்த மன வேதனையில் இருந்த ஈஸ்வரன் வீட்டின் மற்றொரு அறைக்குச் சென்று உள்புறமாக தாழிட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.
நீண்ட நேரமாகியும் அவர் கதவை திறக்காததால் சந்தேகம் அடைந்த அவரது மனைவி கதவை தட்டியுள்ளார். கதவை திறக்காததால் சந்தேகம் அடைந்து அருகில் இருப்பவர்கள் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது ஈஸ்வரன் மனைவியின் சேலையினால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
போலீஸ் விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நல்லூர் போலீசார் ஈஸ்வரன் உடலை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலை குறித்து நல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆயுதப்படை குடியிருப்பு பகுதியில் போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.