சர்ச்சைக்கு உரிய வகையில் பேசியதாக சீமான் மீது வழக்குப்பதிவு

வழக்குப்பதிவு
சர்ச்சைக்கு உரிய வகையில் பேசியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சர்ச்சை பேச்சு
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக மேனகா நவநீதன் போட்டியிடுகிறார். அவரது அறிமுக கூட்டம் கடந்த 13-ந் தேதி ஈரோடு கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்துக்கு உள்பட்ட திருநகர்காலனியில் நடந்தது.
அப்போது அருந்ததியர் சமூகம் குறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்கு உரிய வகையில் பேசியதாக கூறப்படுகிறது.
வழக்கு பதிவு
இதற்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும், சமூக நீதி மக்கள் கட்சியின் தலைவர் என்.ஆர்.வடிவேல் ராமன் தலைமையில் பல்வேறு சமூக அமைப்புகளும் நடவடிக்கை எடுக்கக்கோரி ஈரோடு மாவட்ட கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, தேர்தல் நடத்தும் அதிகாரி ஆகியோரிடம் புகார் மனுக்கள் கொடுத்து இருந்தனர். இந்தநிலையில் நேற்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதுகுறித்து நிருபர்களுக்கு பேட்டி அளித்த ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் கூறும்போது, 'நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த 13-ந் தேதி சர்ச்சைக்கு உரிய வகையில் பேசியதாக பெறப்பட்ட புகார்களின் பேரில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது' என்றார்.