இளையான்குடி, காரைக்குடி பகுதியில் பலத்த மழை

இளையான்குடி மற்றும் காரைக்குடி பகுதியில் பலத்த மழை பெய்தது. சாலைகளில் தண்ணீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
இளையான்குடி,
இளையான்குடி மற்றும் காரைக்குடி பகுதியில் பலத்த மழை பெய்தது. சாலைகளில் தண்ணீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
பலத்த மழை
சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக காலை முதல் மதியம் வரை வெயில் தாக்கம் குறைந்த நிலையில் சில இடங்களில் அவ்வப்போது பலத்த மழையும், சில இடங்களில் மிதமான மழையும் பெய்து வருகிறது. இதையொட்டி சிவகங்கை, காரைக்குடி, இளையான்குடி, திருப்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காலை மற்றும் இரவு நேரங்களில் பலத்த மழையும், சில இடங்களில் சாரல் மழையும் பெய்து வருகிறது.
இந்நிலையில் இளையான்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் காலை முதல் வெயிலின் தாக்கம் குறைவாக இருந்த நிலையில் மதியம் 2 மணிக்கு திடீரென பலத்த மழை பெய்தது. இந்த மழை சுமார் 1 மணி நேரத்திற்கும் மேல் பெய்ததால் இளையான்குடி கண்மாய்க்கரை பகுதி, வாள்மேல் நடந்த அம்மன் கோவில் பகுதி, பஜார் பகுதி, சாலையூர் ஆகிய பகுதியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஆங்காங்கே குளம்போல் தேங்கி நின்றது.
வாகன ஓட்டிகள் அவதி
மேலும் மழைநீர் வாய்க்கால்கள் மற்றும் வரத்து கால்வாய்களை சீரமைக்காததால் தண்ணீர் வெளியேற முடியாமல் இடுப்பளவு தேங்கி நின்றது. இதனால் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாகன ஓட்டிகள் அங்கிருந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் சில வாகனங்கள் மழைநீரில் சிக்கி பழுதாகியது. இதனால் வாகன ஓட்டிகள் வாகனங்களை தள்ளி சென்றனர்.
இதேபோல் இளையான்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் பெய்த மழையால் அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். காரைக்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு பலத்த மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை 1 மணி நேரத்திற்கும் மேல் நீடித்ததால் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
பொதுமக்கள் மகிழ்ச்சி
காரைக்குடி நகர் பகுதியில் காலை வழக்கம் போல் வெயில் அடித்த நிலையில் மதியம் 2 மணிக்கு திடீரென வானம் மேகமூட்டத்துடன் காட்சியளித்தது. பின்னர் பலத்த மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை அரை மணி நேரத்திற்கும் மேல் நீடித்ததால் பல இடங்களில் உள்ள சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
சில இடங்களில் மழைநீர் செல்ல வழியில்லாமல் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். மேலும் நேற்று இரவு வரை காரைக்குடி மற்றும் சுற்று வட்டார பகுதியில் குளுமையான நிலை நீடித்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.