கொடைக்கானலில் சூறாவளி காற்றுடன் கொட்டித்தீர்த்த கனமழை


கொடைக்கானலில் சூறாவளி காற்றுடன் கொட்டித்தீர்த்த கனமழை
x
தினத்தந்தி 5 Jun 2023 12:30 AM IST (Updated: 5 Jun 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானலில் சூறாவளி காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது.

திண்டுக்கல்

கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் மலைப்பகுதியில் நேற்று மாலை சூறாவளி காற்றுடன் கனமழை கொட்டித்தீர்த்தது. இதன் எதிரொலியாக, கொடைக்கானல்-பழனி மலைப்பாதையில் உள்ள மேல்பள்ளம், சவரிக்காடு, கோம்பைக்காடு உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் சாய்ந்து, சாலையில் விழுந்தன. இதனால் பழனி மலைப்பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

குறிப்பாக கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்துவிட்டு, பழனி நோக்கி சென்ற சுற்றுலா பயணிகள் அவதியடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள், சம்பவ இடங்களுக்கு சென்று சாலையில் சாய்ந்த மரங்களை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அவர்களுக்கு வாகன ஓட்டிகளும் உதவி செய்தனர். அதன்பிறகு சுற்றுலா பயணிகள் அங்கிருந்து வாகனங்களில் புறப்பட்டனர். மரங்கள் சாலையில் சாய்ந்ததால் கொடைக்கானல்-பழனி மலைப்பாதையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த மலைப்பாதையில் சாலையோரம் ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை நெடுஞ்சாலை மற்றும் வனத்துறையினர் அகற்ற முன்வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கிடையே கொடைக்கானல் மேல்பள்ளம் பகுதியில் கேரளா சுற்றுலா பயணி ஒருவர் தனது சொகுசு காரை சாலையில் நிறுத்திவிட்டு, தங்கும் விடுதிக்கு சென்றார். அப்போது சூறாவளி காற்று வீசியதில், அந்த சொகுசு கார் மீது மரக்கிளை முறிந்து விழுந்தது. இதில், அந்த கார் சேதமடைந்தது.


Next Story