திருவாரூரில் கடும் பனிப்பொழிவு


திருவாரூரில் கடும் பனிப்பொழிவு
x

திருவாரூரில் கடும் பனிப்பொழிவு

திருவாரூர்

திருவாரூரில் நேற்று காலை 8 மணி வரை பனிப்பொழிவு இருந்ததால் சாலையில் முகப்பு விளக்கை எரிய விட்டபடி வாகனங்கள் சென்றன.

பனியின் தாக்கம்

தமிழகத்தில் கார்த்திகை, மார்கழி, தை மாதங்கள் பனிக்காலமாகும். தை மாதத்தில் இருந்து பனியின் தாக்கம் மெல்ல மெல்ல குறையும். ஆனால் நேற்று அதிகாலை திருவாரூரில் வழக்கத்தை விட பனியின் தாக்கம் இருந்தது. திருவாரூரில் கடந்த சில நாட்களாக இரவு முதல் அதிகாலை வரை கடுங்குளிர் நிலவி வருகிறது.

இரவு 9 மணிக்கு மேல் தொடங்கும் குளிர் காலை 8 மணி வரை நீடிக்கிறது. இதனால் இரவு 10 மணிக்கு பிறகு சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து வருகிறது. நேற்று காலை நகரில் பனிமூட்டம் காணப்பட்டது. காலை 8 மணி வரை வெள்ளை நிற புகை மூட்டம் போல் காணப்பட்டது. சாலைகளில் எதிரே வரும் வாகனம் கூட தெரியவில்லை அந்த அளவுக்கு பனிமூட்டம் இருந்தது.

நடைப்பயிற்சி

இதனால் வாகனங்கள் அனைத்தும் முகப்பு விளக்குகளை எரியவிட்ட படி சாலையில் சென்றதை பார்க்க முடிந்தது. அதேபோல் குடியிருப்பு பகுதிகளில் எதிரே உள்ள வீடு தெரியாத அளவுக்கு பனிமூட்டம் காணப்பட்டது. காலை 8 மணிக்கு பிறகே பனிமூட்டம் குறைந்தது. விளைநிலங்கள் உள்ள பகுதிகளிலும் பனிப்பொழிவு அதிகமாக காணப்பட்டது.

இந்த பனிப்பொழிவால் அதிகாலை நேரத்தில் நடைப்பயிற்சி சென்றவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். பனிப்பொழிவில் இருந்து தப்பிக்க நடைப்பயிற்சி சென்றவர்கள் ஸ்வெட்டர், மப்ளர் போன்றவற்றை அணிந்து சென்றதை காண முடிந்தது.


Related Tags :
Next Story