நாகர்கோவில் அருகே பஸ் மீது கார் மோதல்: பலியான 4 பேர் பற்றி உருக்கமான தகவல்கள்

நாகர்கோவில் அருகே பஸ் மீது கார் மோதிய விபத்தில் பலியான 4 பேர் பற்றி உருக்கமான தகவல் வெளியாகி உள்ளது. மேலும் விபத்து நடந்த பகுதியில் சாலை தடுப்புச்சுவர் அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் அருகே பஸ் மீது கார் மோதிய விபத்தில் பலியான 4 பேர் பற்றி உருக்கமான தகவல் வெளியாகி உள்ளது. மேலும் விபத்து நடந்த பகுதியில் சாலை தடுப்புச்சுவர் அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
விபத்தில் 4 பேர் பலி
நாகர்கோவில் வெள்ளமடம் அருகே லாயம் விலக்கு பகுதியில் அரசு பஸ் மீது கார் மோதிய விபத்தில் நடன கலைஞர்கள் 4 பேர் பலியானார்கள். 9 பேர் காயமடைந்தனர்.
இதற்கிடையே பலியானவர்கள் குடும்பத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா ரூ.2 லட்சம் நிவாரணமும், காயமடைந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.50 ஆயிரம் நிவாரணமும் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
உருக்கமான தகவல்கள்
இந்த நிலையில் பலியான 4 பேர் பற்றி உருக்கமான தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது விபத்தில் உயிரிழந்தவர்களில் அருமனை அருகே குழிஞ்சான்விளை பகுதியை சேர்ந்த கண்ணனுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்துள்ளது. இவர் தான் நடன குழுவினரை ஒருங்கிணைத்துள்ளார். பெயிண்டிங் வேலைக்கு சென்று வந்த கண்ணனுக்கு, பல் வேறு நடனக்குழுக்களுடன் தொடர்பு உண்டு. இதனால் நிகழ்ச்சிக்காக பல்வேறு இடங்களில் இருந்து நடன கலைஞர்களை அழைத்து செல்வது வழக்கம்.
அந்த வகையில் தற்போதும் பல்வேறு பகுதிகளில் இருந்து நடன கலைஞர்களை நிகழ்ச்சிக்காக அழைத்து சென்றுள்ளார். கொரோனாவுக்கு பிறகு நடன கலைஞர்கள் மிகவும் வறுமையில் இருந்துள்ளனர். இந்த குழுவில் இடம் பெற்றுள்ள அனைவருமே ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களை சேர்ந்தவர்கள் ஆவர். குடும்ப வருமானத்துக்காக கல்வி, வேலைக்கு இடையே அவ்வப்போது இதுபோன்ற நடன நிகழ்ச்சிகளுக்கு செல்பவர்கள் ஆவர்.
கல்லூரி மாணவர்
மேலும் உயிரிழந்த குழிஞ்சான்விளை பகுதியை சேர்ந்த அபிஷேக் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இவர் குடும்ப வருமானத்துக்காக அவ்வப்போது இசை நிகழ்ச்சிகளுக்கு செல்வது வழக்கம். இவர் நடனம் ஆடுவதுடன் நன்றாக பாடலும் பாடும் திறமையும் கொண்டவர் என்று தெரிவித்தனர்.
விபத்தில் பலியான திருவரம்பூர் அம்பன்காலை பகுதியை சேர்ந்த அஜித் மியூசிக்கில் சிறந்து விளங்கி உள்ளார். பலியான மற்றொருவரான சதீசுக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இவர் தான் விபத்துக்குள்ளான காரை ஓட்டி வந்துள்ளார். கண்ணன் தான் காரை ஓட்டுவது வழக்கமாக இருந்துள்ளது. ஆனால் நள்ளிரவு வரை நடன நிகழ்ச்சி இருந்ததால், தனக்கு தூக்கம் வருவதாக கண்ணன் கூறியுள்ளார். இதனால் காரை ஓட்டும் பொறுப்பு சதீசுக்கு போயுள்ளது.
வழக்குப்பதிவு
விபத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் கூறுகையில், விபத்து நடந்த பகுதி வளைவான இடம் ஆகும். கார் வேகமாக வந்த சமயத்தில் கட்டுப்பாட்டை இழந்துவிட்டது. டிரைவர் சுதாரித்துக் கொண்டு காரை திருப்புவதற்குள் எதிரே வந்த அரசு பஸ் மீது மோதிவிட்டது. காரின் வேகத்தை பார்த்ததும் டிரைவர் பஸ்சை நிறுத்திவிட்டார். அதே சமயம் பஸ்சும் வேகமாக வந்திருந்தால் இன்னும் உயிர் சேதம் அதிகரித்து இருக்கும் என்றனர்.
விபத்து குறித்து அரசு பஸ் டிரைவர் வைராக்குடியிருப்பை சேர்ந்த இம்மானுவேல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் கார் டிரைவரான மரணம் அடைந்த சதீஷ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தடுப்புச்சுவர் அமைக்க கோரிக்கை
இதற்கிடையே விபத்து நடந்த இடத்தில் சாலையின் இரு பக்கமும் பேரிகார்டு வைக்கப்பட்டது. மேலும் இரண்டு ரோடு பிரியும் இடத்தில் சாலையின் நடுவில் மணல் மூட்டை மூலம் தடுப்பு அமைக்கப்பட்டது. ஆனால் நேற்று சாலையின் நடுவில் வைக்கப்பட்ட மணல் சாக்கு தடுப்பு மேல் வாகனங்கள் ஏறி இறங்கி சென்றதால் அவை முற்றிலுமாக சேதமடைந்து உள்ளது.
விபத்தை தடுப்பதற்காக வைத்தது, விபத்தை ஏற்படுத்தும் நிலைக்கு சென்று விட்டது என பொதுமக்கள் தெரிவித்தனர். எனவே இதனை அகற்றி முறைப்படி அங்கு சாலை தடுப்புச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.