ஊட்டி நகராட்சி அலுவலகத்தை ஓட்டல் உரிமையாளர்கள் முற்றுகை

வரி செலுத்தாததால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டதை தொடர்ந்து ஊட்டி நகராட்சி அலுவலகத்தை ஓட்டல் உரிமையாளர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஊட்டி
வரி செலுத்தாததால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டதை தொடர்ந்து ஊட்டி நகராட்சி அலுவலகத்தை ஓட்டல் உரிமையாளர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நகராட்சி அலுவலகம் முற்றுகை
நீலகிரியில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக பிரதான தொழிலாக சுற்றுலா உள்ளது. இங்கு ஆண்டுக்கு சுமார் 30 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இவர்களை நம்பி மாவட்டம் முழுவதும் ஏராளமான ஓட்டல்கள் செயல்பட்டு வருகின்றன. இந்தநிலையில் வரி செலுத்தாத ஓட்டல்களின் குடிநீர் மற்றும் சாக்கடை இணைப்புகளை ஊட்டி நகராட்சி நிர்வாகம் துண்டித்து வருவதாக தெரிகிறது. இதை கண்டித்து ஓட்டல் மற்றும் உணவக சங்கத்தினர் நேற்று நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.இதுகுறித்து ஓட்டல் மற்றும் உணவக சங்க தலைவர் முஸ்தபா கூறும் போது, அனைத்து வரிகளும் இரட்டிப்பாக்கப்பட்ட நிலையில், வரி செலுத்தவில்லை என்றுக்கூறி நகராட்சி அதிகாரிகள் முன்னறிவிப்பு இல்லாமல் குடிநீர் மற்றும் சாக்கடை இணைப்புகளை துண்டித்துள்ளனர். எனவே வரியை செலுத்த கால அவகாசம் அளிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் போராட்டம் தொடரும். இந்த பிரச்சினையில் சுற்றுலாத்துறை அமைச்சர், எம்.பி., எம்.எல்.ஏ. ஆகியோர் தலையிட்டு தீர்வு காண வேண்டும்என்றார்.
நடவடிக்கை தொடரும்
இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் காந்தி ராஜ் கூறுகையில், ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள சுமார் 200-க்கும் மேற்பட்ட ஓட்டல்களில் முதல் காலாண்டு வரியை சரியாக கட்டியுள்ளனர். ஆனால் 2-வது காலாண்டு வரியை கட்டவில்லை. இதுகுறித்து தகவல் தெரிவித்தும், கட்டாததால் சேரிங்கிராஸ் உள்ளிட்ட பகுதிகளில் 7 ஓட்டல்களில் குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளது. ஓட்டல் நிர்வாகத்தினர் சுமார் ரூ.5 கோடி வரி கட்ட வேண்டியுள்ளது. இந்த மாத இறுதி வரை அவர்களுக்கு காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது. அதற்கு பின்னரும் செலுத்தாவிட்டால் துண்டிப்பு நடவடிக்கை தொடரும் என்றார்.