2 பெண்களை கொலை செய்த வேட்டைக்காரர் திருச்சி சிறையில் அடைப்பு


2 பெண்களை கொலை செய்த வேட்டைக்காரர் திருச்சி சிறையில் அடைப்பு
x

ஜெயங்கொண்டம் அருகே 2 பெண்களை கொலை செய்த ேவட்டைக்காரரை போலீசார் கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தனர். மேலும், அப்பகுதியில் அசம்பாவித சம்பவங்களை தடுக்க போலீசார் குவிக்கப்பட்டனர்.

அரியலூர்

2 பெண்கள் கொலை

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள பெரியவளையம் கிராமத்தை சேர்ந்தவர் கலைமணி. இவரது மனைவி மலர்விழி (வயது 29). கடந்த 22-ந் தேதி இவரும், அதே பகுதியை சேர்ந்த தண்டபாணி மனைவி கண்ணகியும் (40) சமையலுக்கு காளான் பறிப்பதற்காக அருகே உள்ள வயல்வெளிக்கு சைக்கிளில் சென்றுள்ளனர். அப்போது அவர்கள் 2 பேரும் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் கொலையாளியை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

காட்டுப்பன்றி வேட்டை

இந்தநிலையில் கழுவந்தோண்டி கிராமத்தை சேர்ந்த வேட்டைக்காரரான பால்ராஜை (39) சந்தேகத்தின் பேரில் பிடித்து போலீசார் விசாரித்தனர். இதில் அந்த 2 பெண்களையும் அவர் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இந்த சம்பவம் குறித்து பால்ராஜ் போலீசில் அளித்துள்ள வாக்கு மூலத்தில் கூறியதாவது:-

வழக்கமாக அதிகாலை நேரங்களில் காட்டுப்பன்றி வேட்டைக்கு சென்று வருவேன். சம்பவத்தன்று மலர்விழியும், கண்ணகியும் காளான் பறிக்க வந்துள்ளனர். இந்தநிலையில், புதருக்குள் அசைவு கேட்டதால் நாட்டு துப்பாக்கியால் சுட்டேன். அப்போது கண்ணகியின் தொடையில் குண்டு பாய்ந்து வலியால் அலறினார்.

6½ பவுன் சங்கிலி பறிப்பு

இதனைகண்டு அதிர்ச்சியடைந்த மலர்விழி என்னிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது ஆத்திரம் அடைந்த நான் துப்பாக்கியின் பின்பக்கம் திருப்பி கட்டையால் தலையில் சரமாரியாக தாக்கினேன். இதில் மலர்விழி சம்பவ இடத்திலேயே துடி துடித்து பரிதாபமாக இறந்தார்.

இந்த நிலையில் கண்ணகி தனது செல்போன் மூலம் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த நான் அவரிடம் இருந்த செல்போனை பிடுங்கி சுவிட்ச் ஆப் செய்து விட்டு அவரை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு மலர்விழி அணிந்து இருந்த 6½ பவுன் தாலிசங்கிலியை பறித்து கொண்டு காரைக்கால் தப்பி சென்றதாக கூறினார்.

சிறையில் அடைப்பு

இதனை தொடர்ந்து பால்ராஜிடம் இருந்து 6½ பவுன் தாலிசங்கிலி, நாட்டு துப்பாக்கி மற்றும் கத்தியை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை செந்துறை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். குற்றவாளி பால்ராஜுக்கு கலைவாணி என்ற மனைவியும், 7 வயதில் ஒரு மகனும், 5 வயதில் ஒரு மகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

போலீசார் பாதுகாப்பு

இந்தநிலையில் 2 பெண்களை கொலை செய்த பால்ராஜ் வீட்டை நோக்கி பெரியவளையம் கிராம மக்கள் திரண்டு செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின் பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு கலைக்கதிரவன் தலைமையிலான போலீசார் கழுவந்தோண்டி பகுதியில் ஏரிக்கரை தெருவில் இருக்கும் பால்ராஜ் வீட்டை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் இருக்க பெரியவளையம் கிராமத்திலும் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story