பனமரத்துப்பட்டி அருகே குடிபோதையில் மனைவியை தீ வைத்து எரித்த கணவர் கைது
பனமரத்துப்பட்டி அருகே குடிபோதையில் மனைவியை தீ வைத்து எரித்த கணவரை போலீசார் கைது செய்தனர்.
பனமரத்துப்பட்டி:
குடிப்பழக்கம்
சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அருகே உள்ள குரால்நத்தம் கிராமம் முத்தானூர் அருந்ததியர் தெரு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 31). கிரேன் ஆபரேட்டர். இவருடைய மனைவி ஜெயராணி (32). இவர்களுக்கு திருமணம் ஆகி 3 மாதம் ஆகிறது. 2 பேருக்குமே இது 2-வது திருமணம் ஆகும்.
மணிகண்டனுக்கு நீண்ட நாட்களாக குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே தினமும் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மணிகண்டன் மீண்டும் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார்.
தீ வைத்து எரித்தார்
இதனால் அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக ஜெயராணி, மணிகண்டனை திட்டியதால், ஆத்திரம் அடைந்த மணிகண்டன் அருகில் இருந்த தீப்பெட்டியை எடுத்து ஜெயராணியின் நைட்டியில் தீயை பற்ற வைத்துள்ளார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த ஜெயராணி நைட்டியை கழற்ற முயன்றுள்ளார். ஆனால் அதற்குள் நைட்டி முழுவதும் தீ பரவியது. இதில் அவரது கை, முகம் உள்ளிட்ட பகுதிகளில் தீக்காயம் ஏற்பட்டது. இதனால் அவர் அலறி துடித்துள்ளார்.
ஜெயராணியின் அலறல் சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்து, அவரை மீட்டு சிகிச்சைக்காக மல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கைது
இது குறித்த புகாரின் பேரில் பனமரத்துப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, மணிகண்டனை கைது செய்தனர். குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் மனைவியை கணவனே தீ வைத்து எரித்த சம்பவம் அந்தபகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.