கோவில் பூட்டை உடைத்து ஐம்பொன் சிலை கொள்ளை

கோவில்பட்டியில் கோவில் பூட்டை உடைத்து ஐம்பொன் சிலையை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
கோவில்பட்டி:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சுபாநகரில் பிரசித்தி பெற்ற நித்ய கல்யாண வேங்கடேஸ்வர பெருமாள் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவில் அர்ச்சகர் வரதராஜ அய்யங்கார் பூஜைகளை முடித்து விட்டு கோவிலை பூட்டி விட்டு சென்றார். நேற்று காலையில் கோவிலுக்கு பக்தர்கள் வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு கோவில் கதவு திறந்து கிடந்தது. இதை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்து, அர்ச்சகருக்கு தகவல் தெரிவித்தனர். அவர் விரைந்து வந்து, கோவிலுக்குள் சென்று பார்த்தபோது அங்கிருந்த போகர் சீனிவாசன் சுவாமி ஐம்பொன் சிலை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. மேலும் சுவாமிக்கு அணிவித்து இருந்த வெள்ளி பூணூல், பக்தர்களுக்கு ஆசி வழங்கும் வெள்ளி சடாரி கோபுரம் உள்ளிட்ட ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்களும் திருடப்பட்டு இருந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில் கோவில்பட்டி மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவானந்த், சப்- இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். நள்ளிரவில் மர்ம நபர்கள் கோவில் பூட்டை உடைத்து உள்ளே சென்று ஐம்பொன் சிலை உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள்.