ஊட்டியில் உறைபனி தாக்கம் குறைந்தது


ஊட்டியில் உறைபனி தாக்கம் குறைந்தது
x
தினத்தந்தி 25 Jan 2023 6:45 PM GMT (Updated: 25 Jan 2023 6:46 PM GMT)

ஒரு மாதத்துக்கு பின்னர் ஊட்டியில் உறைபனி தாக்கம் குறைந்து வருகிறது.

நீலகிரி

ஊட்டி,

ஒரு மாதத்துக்கு பின்னர் ஊட்டியில் உறைபனி தாக்கம் குறைந்து வருகிறது.

உறைபனி தாக்கம்

நீலகிரி மாவட்டத்தில் நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி வரை பனிக்காலம் நிலவும். தொடக்கத்தில் நீர்ப்பனி பொழிவு அதிகரித்து, அதன் பின்னர் உறைபனி தாக்கம் காணப்படும். இந்த நிலையில் சீதோஷ்ண காலநிலை மாறுபாடு காரணமாக, கடந்த ஆண்டு பருவமழை தாமதமாக தொடங்கியது.

இதைத்தொடர்ந்து பனிக்காலம் தாமதமாக கடந்த நவம்பர் 15-ந் தேதி முதல் தொடங்கியது. பின்னர் கடந்த டிசம்பர் மாதம் 24-ந் தேதி முதல் உறைபனி தாக்கம் அதிகரித்து வருகிறது. நீலகிரி, கோவை மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் இரவு நேரங்களில் உறைபனிக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

மைனஸ் 5 டிகிரி செல்சியஸ்

இதையடுத்து ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடும் உறைபனி பொழிவு காணப்பட்டது. ஊட்டி அருகே அவலாஞ்சி பகுதியில் குறைந்தபட்சமாக இந்த ஆண்டு மைனஸ் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவானது. மேலும் ஊட்டியில் குறைந்தபட்சமாக ஒரு டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.

உறைபனி காரணமாக தேயிலை செடிகள் கருகி வருவதோடு, காய்கறி தோட்டங்களில் பயிர்கள் வளர்ச்சி பாதிக்கப்பட்டு உள்ளது. மேலும் காலையில் மைதானங்கள் வெள்ளை போர்வை போர்த்தியது போல் காட்சியளித்தது. கடுங்குளிரால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

அதிகமாக இருக்காது

இந்தநிலையில் நேற்று முன்தினம் முதல் ஊட்டியில் உறைபனி தாக்கம் குறைய தொடங்கி உள்ளது. கடந்த 2 நாட்களாக நீலகிரி மாவட்டம் ஊட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது. இதமான சீதோஷ்ண காலநிலை நிலவுவதால் உறைபனி தாக்கம் குறைந்து உள்ளது. ஒரு மாதமாக பொதுமக்களை கடுங்குளிர் வாட்டி வந்தது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து காலநிலை ஆராய்ச்சி மைய அதிகாரி ஒருவர் கூறுகையில், கடந்த 23-ந் தேதி வரை குறைந்தபட்சமாக ஊட்டி பகுதிகளில் 2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி வந்தது. கடந்த 2 நாட்களாக குறைந்தபட்சமாக 8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி வருகிறது. இதேபோல் மண் மற்றும் நீர்வள ஆராய்ச்சி மையத்திலும் குறைந்தபட்சமாக நேற்று 6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியது. இதற்கு பின்னர் மீண்டும் உறைபனி தாக்கம் இருந்தாலும், அதிகமாக இருக்காது. படிப்படியாக குறைந்து விடும் என்றார்.


Next Story