பட்டுப்புழு வளர்ப்பு தொழில் பாதிப்பு


பட்டுப்புழு வளர்ப்பு தொழில் பாதிப்பு
x
தினத்தந்தி 13 April 2023 12:30 AM IST (Updated: 13 April 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

ஆண்டிப்பட்டி பகுதியில் பட்டுப்புழு வளர்ப்பு தொழில் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தேனி

பட்டுப்புழு வளர்ப்பு தொழில்

தேனி மாவட்டத்தில் போடி, தேனி, ஆண்டிப்பட்டி ஆகிய ஒன்றியங்களில் பல்வேறு இடங்களில் பட்டுப்புழு வளர்ப்பு தொழில் நடைபெறுகிறது. ஆண்டிப்பட்டி அருகே அம்மாச்சியாபுரம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பட்டுப்புழு வளர்ப்பு தொழிலில் விவசாயிகள் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தொழிலில் 7 நாட்கள் வயதுடைய இளம்புழுக்களை விவசாயிகளுக்கு அரசு வழங்குகிறது. அந்த புழுக்களுக்கு மெல்பரி இலைகளை உணவாக அளித்து சுமார் 14 நாட்கள் வளா்க்கப்படுகிறது. அந்த புழுக்கள் பட்டு நூலை கொண்டு கூடுகளை கட்டும்.

இந்த கூடுகளை சேகரித்து பல்வேறு பகுதிகளுக்கு விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரையில் ஒரு கிலோ பட்டுக்கூடுகள் ரூ.800-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது ஒரு கிலோ பட்டுக்கூடு ரூ.350 முதல் ரூ.500 ஆக குறைந்துள்ளது. இதனால் பட்டுப்புழு வளர்ப்பு தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டு விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

வெயில் தாக்கம் அதிகரிப்பு

இதுகுறித்து பட்டுபுழு வளர்க்கும் விவசாயிகளிடம் கேட்டபோது, தற்போது பட்டுக்கூடுகள் விற்கும் விலை பராமரிப்பு செலவுக்குகூட போதுமானதாக இல்லை. பட்டு நூல்களின் விலை கொஞ்சம் கூட குறையாத நிலையில், பட்டுக்கூடுகளுக்கான விலை மட்டுமே குறைந்துள்ளதால் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகிறோம். இதுதவிர பட்டுப்புழு வளர்ப்புக்கு அரசு வழங்கி வந்த பல்வேறு மானியங்கள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இடைத்தரகர்கள் தலையீடு அதிகரித்துள்ளதால் போதுமான விலை கிடைக்கவில்லை. மேலும் எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு கோடை வெயில் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் பட்டுக்கூடு உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. பட்டுக்கூடுகளை இடைத்தரகர்கள் தலையீடு இன்றி அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்றனர்.


Next Story