தூத்துக்குடி அருகே தனியார் குடோனில்ரூ.3.20 லட்சம் முந்திரி கொட்டைகளை கொள்ளையடித்த 5 பேர் சிக்கினர
தூத்துக்குடி அருகே தனியார் குடோனில் ரூ.3.20 லட்சம் முந்திரி கொட்டைகளை கொள்ளையடித்த 5 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
ஸ்பிக் நகர்,:
தூத்துக்குடி அருகே தனியார் குடோனில் காவலாளியை கத்தியை காட்டி மிரட்டி, ரூ.3.20 லட்சம் முந்திரி கொட்டைகளை கொள்ளையடித்து சென்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர். இதேபோன்று மற்றொரு குடோனில் கொள்ளையடித்தது தெரிய வந்துள்ளது.
முந்திர கொட்டைகள் கொள்ளை
தூத்துக்குடி பால்பாண்டி நகரை சேர்ந்த ராஜன் மகன் பால்ராஜ் (வயது 48). இவர், தனது நண்பர்கள் எபனேசர், சரவணன் ஆகியோருடன் சேர்ந்து முந்திரி கொட்டைகளை வாங்கி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனம் நடத்தி வருகின்றார். இந்த நிறுவனத்தின் மூலம் முத்தையாபுரம் உப்பாற்று ஓடை பாலம் அருகில் உள்ள திருச்செந்தூருக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் ஓய்வு எடுக்கும் இடத்திற்கு பின்புறம் உள்ள தனியார் குடோனை வாடகைக்கு எடுத்து முந்திரிகொட்டை மூட்டைகளை ஏற்றுமதி செய்வதற்காக வைத்திருந்தனர்.
இந்தநிலையில் கடந்த 7-ந்தேதி அதிகாலையில் அந்த குடோனிற்கு மோட்டார் சைக்கிள் மற்றும் மினிலாரியில் வந்த மர்ம நபர்கள் காவலாளியை கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர். பின்னர் குடோன் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து ரூ.3.20 லட்சம் மதிப்பிலான 40 முந்திரிகொட்டை மூட்டைகளை கொள்ளையடித்து மினி லாரியில் ஏற்றிக் கொண்டு தப்பி ெசன்றனர்.
5 பேர் சிக்கினர்
இதுகுறித்து பால்ராஜ் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில், முத்தையாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் அல்லி அரசன், மகாராஜன், சுந்தர் மற்றும் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், தூத்துக்குடி பெரியசாமி நகர் பாலம் பகுதி மூர்த்தி மகன்களான அழகர் (27), மணிகண்டன் (32), வேலுசாமி மகன் மாரிமுத்து (20), தூத்துக்குடி பிரையண்ட் நகர் தங்கராஜ் மகன் சுரேஷ் (20), முத்தையாபுரம் சுந்தர்நகர் செல்லப்பாண்டி மகன் அஜித்குமார் (26) ஆகியோர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதை தொடர்ந்து தனிப்படை போலீசார் அழகர் உள்ளிட்ட 5 பேரையும் பிடித்து, ரூ.3.20 லட்சம் மதிப்புள்ள முந்திரி கொட்டைகளையும், மினி லாரியையும் மீட்டனர். அவர்கள் முத்தையாபுரம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இதுகுறித்து முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முந்திர கொட்டைகளை கொள்ளையடித்த அழகர் உள்ளிட்ட 5 பேரையும் கைது செய்தனர்.
மற்றொரு குடோனிலும் கொள்ளை
இவர்களிடம் போலீசார் நடத்திய தொடர் விசாரணையில், கடந்த பிப். 15-ந் தேதி முத்தையாபுரம் பகுதியில் மற்றொரு தனியார் குடோனில் நள்ளிரவில் வாட்ச்மேன் சிலுவை முத்துவின் செல்போனை பிடுங்கி தனிஅறையில் பூட்டிவிட்டு, குடோனில் இருந்த 18 முந்திரிக்கொட்டை மூட்டைகளை கொள்ளையடித்து சென்றதும் தெரியவந்தது. இதனையடுத்து அந்த குடோனில் கொள்ளையடித்த ரூ.1. 60 லட்சம் மதிப்புள்ள முந்திரிக்கொட்டை மூட்டைகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.