பவானிசாகரில்வீட்டின் ஓடுகளை உடைத்து வீசிய காட்டு யானை


பவானிசாகரில்வீட்டின் ஓடுகளை உடைத்து வீசிய காட்டு யானை
x

பவானிசாகரில் வீட்டின் ஓடுகளை காட்டு யானை உடைத்து வீசி எறிந்தது. அப்போது உயிர் தப்பிக்க ஓடிய விவசாயி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.

ஈரோடு

புஞ்சைபுளியம்பட்டி

பவானிசாகரில் வீட்டின் ஓடுகளை காட்டு யானை உடைத்து வீசி எறிந்தது. அப்போது உயிர் தப்பிக்க ஓடிய விவசாயி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.

பூங்கா சுவரை உடைத்தது

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பவானிசாகர் வனப்பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன. தற்போது கொளுத்தும் கோடை வெயிலால் வனப்பகுதி காய்ந்து கிடக்கிறது. இதனால் தீவனம் மற்றும் தண்ணீர் தேடி யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி விடுகின்றன. அவ்வாறு வெளியேறும் யானைகள் தோட்டத்து பயிர்களை நாசம் செய்கின்றன. ஊருக்குள் புகுந்தும் அட்டகாசத்தில் ஈடுபடுகின்றன. இந்தநிலையில் கடந்த ஒரு வாரமாக பவானிசாகர் பகுதியில் காட்டு யானை ஒன்று அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகிறது. 2 நாட்களுக்கு முன்பாக பவானிசாகர் பூங்காவின் மதில் சுவரை உடைத்தது. அருகே உள்ள ஓட்டுனர் பயிற்சி மையத்தின் சுற்றுச்சுவரையும் முட்டி சாய்த்தது.

ஓடுகளை உடைத்தது

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு பவானிசாகர் காவலர் குடியிருப்புக்கு எதிரே உள்ள விவசாயி சுப்பையன் (வயது 70) என்பவர் தோட்டத்துக்குள் புகுந்த காட்டு யானை, தோட்டத்து வீட்டின் சிமெண்டு ஓடுகளை உடைத்து வீசி எறிந்தது. சத்தம் கேட்டு வீட்டுக்குள் இருந்து வெளியே வந்த சுப்பையன் வெளியே யானை நிற்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உயிர் தப்பிக்க அங்கிருந்து ஓடினார். அப்போது தவறி விழுந்து அவர் படுகாயம் அடைந்தார்.

சுப்பையன் விழுந்து கிடந்ததை பார்த்த பக்கத்து தோட்டத்து விவசாயிகள் தீப்பந்தத்தை காட்டி யானையை விரட்டினார்கள். பின்னர் சுப்பையனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சிகிச்சை பெற்ற பின்னர் அவர் வீடு திரும்பினார். பவானிசாகர் பகுதியில் தொடர்ந்து அட்டகாசம் செய்து வரும் காட்டு யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்து அடர்ந்த காட்டுக்குள் கொண்டு சென்று விடவேண்டும் என்று அப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story