கடலூரில் தென்பெண்ணையாற்றில் நாளை மறுநாள் ஆற்றுத்திருவிழா முன்னேற்பாடு பணிகள் தீவிரம்


கடலூரில் தென்பெண்ணையாற்றில் நாளை மறுநாள் ஆற்றுத்திருவிழா முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
x
தினத்தந்தி 17 Jan 2023 12:15 AM IST (Updated: 17 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கடலூரில் தென்பெண்ணையாற்றில் நாளை மறுநாள்(வியாழக்கிழமை) ஆற்றுத் திருவிழா நடைபெறுகிறது. அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது.

கடலூர்

தேவர்களுக்கு தை மாதம் முதல் ஆனி மாதம் வரை உள்ள 6 மாதங்கள் உத்தராயன புண்ணிய காலம் என்று சொல்லக்கூடிய பகல் பொழுதாகவும், மீதமுள்ள 6 மாதங்கள் தட்சிணாயன புண்ணியகாலம் என்று அழைக்கப்படும் இரவாகவும் இருக்கும் என்பது ஐதீகம். உத்தராயன புண்ணிய காலத்தின் தொடக்க நாளான முதல் நாளில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. 2-வது நாள் மாட்டுப் பொங்கல், 3-வது நாள் காணும் பொங்கல் (கரிநாள்), 4-வது நாள் வெறும் நாள், 5-வது நாள் திருநாள் என்று அழைக்கப்படுகிறது.

இந்த திருநாளில் புண்ணிய நதியான கங்கை நதி, தென்பெண்ணையாற்றில் கலப்பதாக ஐதீகம். அன்றைய தினம் தென்பெண்ணையாற்றில் உற்சவ மூர்த்திகளுக்கு தீர்த்தவாரி நடத்தினால், கங்கை நதியில் நீராடுவதற்கு சமம் என்ற நம்பிக்கை உள்ளது. இதனால் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின் 5-வது நாளான திருநாள், ஆற்றுத் திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

2 ஆண்டுகளுக்கு பிறகு...

அந்த வகையில் தென்பெண்ணையாற்றின் கரையோர நகரமான கடலூர் மாநகரில் சுற்றுவட்டார கிராம மக்கள் சங்கமிக்கும் விழாவாக ஆற்றுத்திருவிழா, கடலூர் ஆல்பேட்டை தென்பெண்ணையாற்றங்கரையில் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த நிலையில் உலக நாடுகளை அச்சுறுத்திய கொரோனா தொற்று காரணமாக கடந்த 2021 மற்றும் 2022-ம் ஆண்டுகளில் ஆற்றுத்திருவிழா நடத்தப்படவில்லை. தற்போது கொரோனா தொற்று பரவல் முற்றிலும் குறைந்ததையடுத்து, 2 ஆண்டுகளுக்கு பிறகு நாளை மறுநாள் (வியாழக்கிழமை) தென்பெண்ணையாற்று திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. 2 ஆண்டுகள் திருவிழா நடக்காததால், இந்த ஆண்டு ஆற்றுத்திருவிழாவை சிறப்பாக நடத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் கடலூர் மாநகராட்சி நிர்வாகம் முன்னேற்பாடு பணிகளை தீவிரமாக மேற்கொண்டுள்ளது.

முட்செடிகள் அகற்றம்

மேலும் விழாவில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் இருந்து சாமிகளை ஊர்வலமாக தென்பெண்ணையாற்றுக்கு கொண்டு வந்து தீர்த்தவாரி நடத்துவார்கள் என்பதால் சாமிகளை தரிசிக்க சுற்று வட்டார கிராம மக்கள் பெருந்திரளாக கூடுவார்கள். இதையொட்டி கடலூர் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் மஞ்சக்குப்பம் மணிக்கூண்டு அருகில் இருந்து தென் பெண்ணை ஆறு வரை சாலை மற்றும் ஆற்றுப்படுகைகளை சீரமைப்பதுடன், பொக்லைன் எந்திரம் மூலம் முட்செடிகளும் அகற்றப்பட்டு வருகிறது.

மேலும் வளையல், பொம்மை, தின்பண்டம் உள்ளிட்ட கடைகள் அமைப்பதற்காக இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது. சிறுவர்களுக்காக தென்பெண்ணை ஆற்றில் ராட்டினம், டிராகன் ரெயில் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்களும் அமைக்கப்பட்டு வருகிறது. இதுதவிர ஆற்றுத்திருவிழாவையொட்டி ஆயிரக்கணக்கான மக்கள் தென்பெண்ணையாற்றின் கரையோரம் திரள்வார்கள் என்பதால், அதனை பயன்படுத்தி குற்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் மேற்பார்வையில் 2,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.


Next Story