பேரிடர் மேலாண்மை பணிகளில்தூத்துக்குடி முன்மாதிரி மாவட்டமாக திகழ வேண்டும்:தமிழக கூடுதல் தலைமை செயலாளர் எஸ்.கே.பிரபாகர்


தினத்தந்தி 23 Feb 2023 12:15 AM IST (Updated: 23 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பேரிடர் மேலாண்மை பணிகளில் தூத்துக்குடி முன்மாதிரி மாவட்டமாக திகழ வேண்டும் என்று தமிழக கூடுதல் தலைமை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி

பேரிடர் மேலாண்மை முன்னேற்பாடு பணிகளில் தூத்துக்குடி முன்மாதிரி மாவட்டமாக திகழ வேண்டும் என்று தமிழக கூடுதல் தலைமை செயலாளர், வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர் கூறினார்.

ஆய்வு

தமிழக கூடுதல் தலைமை செயலாளர், வருவாய் நிர்வாக ஆணையர் மற்றும் மாநில நிவாரண ஆணையரான எஸ்.கே.பிரபாகர் நேற்று தூத்துக்குடிக்கு வந்தார். அவர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, நெடுஞ்சாலைத்துறையில் பணியின் போது இறந்த பணியாளர்களின் வாரிதாரர்கள் 4 பேருக்கு கருணை அடிப்படையில் இளநிலை வருவாய் ஆய்வாளருக்கான பணி நியமன ஆணையை வழங்கி பேசினார்.

தானியங்கி வானிலை நிலையம்

அப்போது, தமிழக முதல்-அமைச்சர் ஆலோசனையின்படி பேரிடர் மேலாண்மை முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் நடத்தப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து பேரிடர்களுக்கு உள்ளாகும் மாவட்டமாக இருக்கிறது. எனவே பேரிடர் காலங்களில் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படக்கூடாது என்ற அடிப்படையில் அனைத்துத் துறை அலுவலர்கள் பொறுப்புணர்வோடு விரைவாகவும் பணியாற்றி, மாவட்டநிர்வாகத்துக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும். வடகிழக்கு பருவமழைக் காலங்களில் தூத்துக்குடிமாவட்டத்தில் அதிக அளவு பாதிக்கக்கூடிய பகுதிகளாக தூத்துக்குடி, திருச்செந்தூர் மற்றும் ஏரல் உள்ளது. மேலும், 2021-ம் வருடம் மழையைவிட 2022-ம் வருடம் பருவமழை குறைவாக பெய்து உள்ளது. மேலும், தூத்துக்குடி மாவட்டம் பேரிடர் மேலாண்மை முன்னேற்பாட்டுப் பணிகளில் முன்மாதிரி மாவட்டமாக திகழ்ந்து, மாவட்டத்துக்கு நற்பெயரை பெற்றுத்தர அனைத்துத்துறை அலுவலர்களும் முனைப்போடு பணியாற்ற வேண்டும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் 7 தாலுகாக்களில் உள்ள 19 இடங்களில் அலைவரிசை கோபுரங்கள் அமைக்கப்பட்டு வானிலை எச்சரிக்கை விவரங்கள் உடனுக்குடன் கண்காணிக்கப்பட்டு வருகிறது. கயத்தாறு தாலுகா அலுவலக வளாகத்தில் தானியங்கி வானிலை நிலையம் அமைய உள்ளது. அதன் மூலம் வானிலை விவரங்களை உடனுக்குடன் அறிந்து அதற்கு தகுந்தவாறு தூத்துக்குடிமாவட்டத்தில் பேரிடரால் ஏற்படும் இழப்புக்களை தவிர்க்க இயலும். மாவட்டத்தில் 46 இடங்களில் தானியங்கி மழைமானிகள் அமைய இருப்பதால், மழையால் ஏற்படும் பேரிடர்களை குறைக்க ஏதுவாக இருக்கும் என்று கூறினார்.

பின்னர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தகவலியல் மைய அலுவலகத்தில் ரூ.14 லட்சம் செலவில் அமைக்கப்படடு உள்ள காணொலி காட்சி அரங்கம், ஆவண காப்பகம், கூட்ட அரங்குகளை பார்வையிட்டார். பின்னர் மாநகராட்சி பகுதியில் நடைபெறும் மழைநீர் வடிகால், சி.வ.குளம் தூர்வாரும் பணி, நடைபாதை பணிகளை பார்வையிட்டார்.

கலந்து கொண்டவர்கள்

ஆய்வின் போது, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், தூத்துக்குடி உதவி கலெக்டர் கவுரவ்குமார், துணை ஆட்சியர் (பயிற்சி) பிரபு மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story