ஈரோடு மாவட்டத்தில் கல்வித்துறையில் அதிகாரிகளுக்கு எதிராக அணிதிரளும் ஆசிரியர்கள்

ஈரோடு மாவட்டத்தில் கல்வித்துறை அதிகாரிகளுக்கு எதிராக அணிதிரளும் ஆசிரியர்கள், வருமான வரி சோதனை போன்று பள்ளிக்கூடங்களில் ஆய்வு நடத்தியதாக குற்றம்சாட்டி உள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் கல்வித்துறை அதிகாரிகளுக்கு எதிராக அணிதிரளும் ஆசிரியர்கள், வருமான வரி சோதனை போன்று பள்ளிக்கூடங்களில் ஆய்வு நடத்தியதாக குற்றம்சாட்டி உள்ளனர்.
அணிதிரளும் ஆசிரியர் சங்கங்கள்
ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஆசிரியர் சங்கங்கள் ஒன்றாக மாவட்ட கல்வி அதிகாரிக்கு எதிராக அணி திரண்டு உள்ளனர். இதுதொடர்பாக தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் வி.எஸ்.முத்துராமசாமி, தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் பி.சரவணன், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் ரா.மணி, தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் பி.டி.கோபாலகிருஷ்ணன், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் எஸ்.நளினி ஆகியோர் கூட்டாக ஒரு அறிக்கை வெளியிட்டனர்.
அதில், ஈரோடு மாவட்ட தொடக்கக்கல்வி அதிகாரி ஆசிரியர் விரோத போக்குடன் செயல்பட்டு வருகிறார். எனவே ஆசிரியர்கள் சங்கம் சார்பில் இயக்க ரீதியான நடவடிக்கை எடுக்க சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று கூறப்பட்டு உள்ளது. அதன்படி நேற்று மாலை பெரியார் வீதி அரசு தொடக்கப்பள்ளிக்கூடத்தில் கூட்டம் நடந்தது.
வருமான வரி சோதனையா?
முன்னதாக கல்வித்துறை அதிகாரிகள் மீது குற்றம்சாட்டி உள்ள ஆசிரியர் சங்க நிர்வாகிகள், ஈரோடு மாவட்டத்தில் ஒரு ஒன்றியத்தில் உள்ள 68 பள்ளிக்கூடங்களில் 34 குழு அதிகாரிகள் ஒரே நாளில் ஆய்வு என்ற பெயரில் சோதனை நடத்தினார்கள். லஞ்ச ஒழிப்பு மற்றும் வருமான வரித்துறை சார்பில் நடத்தப்படும் சோதனைகள்தான் இதுபோன்ற அதிரடியாக நடத்தப்படுவது வழக்கம். ஆனால், பள்ளிக்கூடங்களில் இப்படி சோதனை நடத்த வேண்டிய அவசியம் என்ன?.
ஏற்கனவே வருவாய்த்துறையின் பணிகளான வாக்காளர் பட்டியல் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆசிரியர்களின் மீது திணித்து வருகிறார்கள். அந்த பணிகளையும் தங்கள் கடமையாக செய்து, பள்ளிக்கூடம் வந்தால் அங்கும் துறை அதிகாரிகளே மனஉளைச்சல் அளிப்பது நியாயம் இல்லை. எனவே ஆசிரியர்கள் ஒன்றிணைந்து செயல்படுவது என்ற முடிவினை சங்க நிர்வாகிகள் எடுத்து உள்ளனர்.
கண்டிப்பு
இதற்கிடையே கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஈரோடு ஒன்றியத்தில் அனைத்து பள்ளிக்கூடங்களிலும் கல்வித்துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு நடத்தினர். பின்னர் மாலையில் இதுதொடர்பான ஆய்வுக்கூட்டம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளிக்கூடத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் மாவட்ட தொடக்கக்கல்வி அதிகாரியுடன், பெருந்துறையில் உள்ள அரசு மாவட்ட ஆசிரியர் பயிற்சி மைய முதல்வர் உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டனர். அப்போது பேசிய அரசு ஆசிரியர் பயிற்சி மைய முதல்வர், பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்களை சுட்டிக்காட்டி அரசின் திட்டப்படி மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நீங்கள் செய்த நடவடிக்கைகள் என்ன என்றும் எண்ணும் எழுத்தும் திட்டம் கண்டிப்பாக முறையாக பின்பற்றப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டு பேசினார். அவர் ஆய்வுக்கு சென்ற பள்ளிக்கூடங்களில் எண்ணும் எழுத்தும் திட்டத்தின் சில குறைபாடுகள் குறித்து பேசிய தலைமை ஆசிரியர்களை கண்டிக்கும் விதத்தில் கூட்டத்தில் பேசிய அவர், உங்கள் செயல்பாடுகளால்தான் மாணவர் சேர்க்கை குறைந்து உள்ளது என்று கடுமையாகவும் பேசி இருக்கிறார். இதுகுறித்து ஆசிரியர்கள் சிலர் கூறும்போது, ஆசிரியர் பயிற்சி மைய முதல்வர் குறிப்பிட்ட பள்ளிக்கூடங்களில் மக்கள் தொகைக்கு ஏற்ப மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். தனியார் பள்ளிக்கூடங்களின் தாக்கம் காரணமாக அரசுப்பள்ளிக்கூடங்களின் வருகை குறைவு போன்ற காரணங்களால் மாணவர் சேர்க்கை குறைந்துஉள்ளது. ஆனால், அவர் முதல்வராக பணியாற்றும் அரசு மாவட்ட ஆசிரியர் பயிற்சி மையம் ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களுக்கு ஒரே மையமாக உள்ளது. இங்கு முதலாம் ஆண்டில் 100 மாணவ-மாணவிகளும், 2-ம் ஆண்டில் 100 மாணவிகளும் படிக்க வேண்டும். ஆனால் தற்போது மொத்தம் 7 மாணவ-மாணவிகள் மட்டுமே படிக்கிறார்கள். தனது பயிற்சி மையத்தில் 50 சதவீதம் கூட மாணவர்கள் சேர்க்க முடியாத ஒருவர் கடினமாக பணியாற்றி வரும் அரசுப்பள்ளி ஆசிரிய-ஆசிரியைகளை கண்டிப்பதையும் நாங்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்பதா என்றும் கேள்வி எழுப்பினார்கள்.
இல்லம்தேடி கல்வி, எண்ணும் எழுத்தும் திட்டம், கல்வி மேலாண்மை தகவல் திட்டம் எனப்படும் எமிஸ் உள்ளிட்ட திட்டங்களால் அதிகாரிகளுக்கு எதிராக ஆசிரியர்கள் அணி திரண்டு வருவது குறிப்பிடத்தக்கது.