கடமலைக்குண்டு பகுதியில்கால்நடை மருத்துவமனைகளில் மருந்து பற்றாக்குறை

கடமலைக்குண்டு பகுதியில் கால்நடை மருத்துவமனைகளில் மருந்து பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
கடமலைக்குண்டு, வருசநாடு, குமணன்தொழு உள்ளிட்ட 7 கிராமங்களில் அரசு கால்நடை மருத்துவமனைகள் செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைகளில் கடந்த சில மாதங்களாக மருந்து, மாத்திரைகள் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதனால் நோய் தாக்குதலுக்கு உள்ளாகி கால்நடைகளுடன் மருத்துவமனைக்கு வரும் பொதுமக்கள் டாக்டர்களிடம் மருந்து, மாத்திரைகளை எழுதி வாங்கி அதனை தனியார் மருந்து விற்பனை கடைகளில் அதிக பணம் கொடுத்து வாங்க வேண்டிய நிலை உள்ளது.
கடந்த மாதம் கடமலை-மயிலை ஒன்றியத்தில் பெய்த சாரல் மழை காரணமாக நாட்டுக்கோழிகளுக்கு மர்ம நோய் தாக்க தொடங்கியது. அப்போது மருத்துவமனைகளில் மருந்து, மாத்திரைகள் இருப்பு இல்லாததால் ஏராளமான கோழிகள் நோய் தாக்கி பலியானது. இதேபோல கால்நடை மருத்துவமனைகள் மூலம் ஆடு, மாடுகளுக்கு தாது உப்பு மற்றும் குடற்புழு நீக்க மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டு வந்தது.
ஆனால் கடந்த 1 ஆண்டாக வழங்கப்படுவதில்லை. மேலும் டாக்டர்கள் மற்றும் உதவியாளர்கள் பணியிடங்களும் காலியாக உள்ளது. இதனால் கடமலைக்குண்டு, குமணன்தொழு உள்ளிட்ட கால்நடை மருத்துவமனைகள் வாரத்தில் பெரும்பாலான நாட்கள் பூட்டியே கிடக்கிறது. எனவே கால்நடை மருத்துவமனைகளில் காலி பணியிடங்களை நிரப்பி தேவையான அளவில் மருந்து, மாத்திரைகள் இருப்பு வைக்க மாவட்ட அதிகாரிகள் நடவடிக்கை வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.