கீழவடகரை, கோகிலாபுரம் ஊராட்சிகளில் உலக சுற்றுச்சூழல் தின விழா

கீழவடகரை, கோகிலாபுரம் ஊராட்சியில் உலக சுற்றுச்சூழல் தின விழா நடந்தது.
சுற்றுச்சூழல் தினம்
பெரியகுளம் அருகே உள்ள கீழவடகரை ஊராட்சியில் உலக சுற்றுச்சூழல் தினம் மற்றும் மரக்கன்று நடும் விழா நடந்தது. இதற்கு ஊராட்சி தலைவர் செல்வராணி செல்வராஜ் தலைமை தாங்கி மரக்கன்றுகளை நட்டு வைத்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) விஜய் மாலா முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் ஊராட்சி செயலாளர் ஜெயபாண்டியன் மற்றும் வார்டு உறுப்பினர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் அரசு கட்டிடங்களை சுத்தம் செய்யும் பணி, பிளாஸ்டிக் ஒழிப்பு பணி மற்றும் சுற்றுப்புற சூழல் விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது.
மரக்கன்று
இதேபோல், கோகிலாபுரம் ஊராட்சி அலுவலகத்தில் உலக சுற்றுச்சூழல் தினம் மற்றும் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் கருப்பையா தலைமை தாங்கினார். துணைத் தலைவர் பிச்சைமணி முன்னிலை வகித்தார்.
உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. பால்பாண்டியன் கலந்து கொண்டு 50-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டார். இதைத்தொடர்ந்து சுற்றுச்சூழல் தினத்தை குறிக்கும் வகையில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ், கிராம நிர்வாக அலுவலர் பிரபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.