கோவில்பட்டியில் வாலிபர் மீது தாக்குதல்
கோவில்பட்டியில் வாலிபர் மீது தாக்குதல் நடத்திய இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி மந்தித்தோப்பு ரோடு காமராஜர் நகர் மேற்கு பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் ஆனந்தமுருகன் (வயது 17). இவரது வீட்டருகே குடியிருந்து வரும் கிருஷ்ணசாமி மகன் கந்தசாமி மாடியில் வீடு கட்டி வருகிறார். இந்த வீடு கட்டுவதற்கு பயன்படும் ஜல்லி கற்களை ஆனந்தமுருகன் வீட்டின் குழாய் மீது போடப்பட்டிருந்துள்ளது. இதை அகற்றுமாறு ஆனந்தமுருகன், அவரது தந்தை பாலசுப்பிரமணியன், தாய் மகேஸ்வரி ஆகியோர் கந்தசாமியிடம் கூறியுள்ளனர். அப்போது கந்தசாமி மற்றும் கட்டிடத் தொழிலாளியான கருப்பசாமி ஆகிய இருவரும் அவர்களை அவதூறாகப் பேசியதுடன், ஆனந்தமுருகனை உருட்டு கட்டையால் தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த ஆனந்தமுருகன் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்த புகாரின் பேரில், மேற்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து சிறுவனை தாக்கியதாக கந்தசாமி, கருப்பசாமி ஆகிய இருவரையும் கைது செய்தனர்.