மோட்டார் சைக்கிள் குட்டையில் பாய்ந்தது; நீரில் மூழ்கி வாலிபர் பலி

கயத்தாறு அருகே மோட்டார் சைக்கிள் குட்டையில் பாய்ந்த விபத்தில் நீரில் மூழ்கி வாலிபர் உயிரிழந்தார்.
கயத்தாறு:
கயத்தாறு அருகே மோட்டார் சைக்கிள் குட்டையில் பாய்ந்த விபத்தில் நீரில் மூழ்கி வாலிபர் உயிரிழந்தார்.
தனியார் நிறுவன ஊழியர்
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள தெற்கு கோனார் கோட்டைபுதூர் கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராமர். விவசாயி. இவருடைய மகன் சோலைராஜா (வயது 17). இவர் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் சோலைராஜா, வடக்கு கோனார் கோட்டைபுதூர் கிராமத்தில் உள்ள சுடலைமாடசாமி கோவில் கொடை விழாவையொட்டி பெங்களூருவில் இருந்து ஊருக்கு வந்திருந்தார்.
குட்டையில் மூழ்கி பலி
அவர் நேற்று முன்தினம் மாலையில் ேமாட்டார் சைக்கிளில் செட்டிகுறிச்சியில் இருந்து வடக்கு கோனார் கோட்டைபுதூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அங்கு சாலையோரத்தில் உள்ள குட்டையில் சமீபத்தில் பெய்த மழையில் தண்ணீர் தேங்கி நின்றது.
அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் குட்டையில் பாய்ந்தது. இதில் சோலைராஜா தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
இதை பார்த்து அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்து கயத்தாறு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.