ஓட்டப்பிடாரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல்; 120 பேர் கைது

ஓட்டப்பிடாரத்தில் சாலைமறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் 120 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரத்தில் அரசு ஆஸ்பத்திரியில் காலியாக உள்ள டாக்டர் மற்றும் போதிய ஊழியர்களை நியமிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாைலமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 120 பேரை போலீசார் கைது செய்தனர்.
சாலைமறியல்
ஓட்டப்பிடாரத்தில் பாரத ஸ்டேட் வங்கி முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு கட்சி ஒன்றிய பொருளாளர் செல்வராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர்கள் அழகு, அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கோரிக்கைகள்
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்கவேண்டும், அரசு அலுவலகங்களில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஓட்டப்பிடாரம் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர் மற்றும் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், இரவு நேரத்தில் டாக்டர் நியமிக்கப்படுவதுடன், மீண்டும் பிரேத பரிசோதனைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும், ஓட்டப்பிடாரத்தில் அரசு கலைக்கல்லூரி மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, ஓட்டப்பிடாரத்தில் அரசு போக்குவரத்து கழக பணிமனை அமைக்க வேண்டும், ஓட்டப்பிடாரத்தில் பொதுசுகாதார வளாக வசதி செய்து தர வேண்டும், புதியம்புத்தூரில் ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும், ஆரைக்குளம் கிராமத்தில் பொதுமக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.
120 பேர் கைது
மறியலில் ஈடுபட்ட 92 பெண்கள் உள்பட 120 பேரை மணியாச்சி போலீஸ் துணை சூப்பிரண்டு லோகேஸ்வரன் தலைமையில் போலீசார் கைது செய்து சமுதாய நலக்கூடத்தில் தங்க வைத்தனர்.