தூத்துக்குடி மாநகராட்சியில் 300 இடங்களில் பகுதி சபை கூட்டம்: மேயர் ஜெகன் பெரியசாமி
தூத்துக்குடி மாநகராட்சியில் 300 இடங்களில் பகுதி சபை கூட்டம் நடத்தப்படும் என மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாநகராட்சியில் 300 இடங்களில் பகுதி சபை கூட்டம் நடத்தப்பட உள்ளது என்று மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி கூறினார்.
மாநகராட்சி கூட்டம்
தூத்துக்குடி மாநகராட்சி அவசர கூட்டம் நேற்று காலையில் மாநகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது.
கூட்டத்துக்கு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கினார். ஆணையாளர் சாருஸ்ரீ முன்னிலை வகித்தார்.
குரூஸ்பர்னாந்து மணிமண்டபத்துக்கு...
கூட்டத்தில் தூத்துக்குடி மாநகராட்சிக்கு சொந்தமான தமிழ்சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். பூங்காவின் கிழக்கு பகுதியில் 21.2 சென்ட் பரப்பில் ராவ் பகதூர் குரூஸ்பர்னாந்துக்கு மணிமண்டபம் அமைக்க நிலம் ஒதுக்கீடு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதே போன்று உள்ளாட்சி அமைப்புகளில், நகர்ப்புற உள்ளாட்சி நிர்வாகத்தை வலுப்படுத்தவும், நகர்ப்புற உள்ளாட்சி செயல்பாடுகளில் பொதுமக்களின் பங்கேற்பு மற்றும் திட்டம், வளர்ச்சி பணிகள் செயல்படுத்தவும், உரிய சட்டத்தின்படி வார்டு குழு மற்றும் பகுதி குழுவுக்கு உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். அதன்படி ஒவ்வொரு வார்டுக்கும் தலா 5 பகுதி சபை உறுப்பினர்கள நியமனம் செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பின்னர் அனைத்து கட்சி கவுன்சிலர்களும் ராவ்பகதூர் குரூஸ்பர்னாந்து மணிமண்டபம் அமைக்க இடம் ஒதுக்கீடு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு நன்றி தெரிவித்தும், வரவேற்றும் பேசினர்.
300 இடங்களில் கூட்டம்
கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி பேசும் போது, 1000 வாக்காளர்களுக்கு ஒரு பகுதி சபை உறுப்பினர் என்ற அடிப்படையில் அந்தந்த பகுதியை சேர்ந்த ஒருவர் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அந்த உறுப்பினர், முறையாக வரிகளை செலுத்தி இருக்க வேண்டும், குற்றவியல் பின்னணி இல்லாதவராக இருக்க வேண்டும், அரசு இடத்தை ஆக்கிரமித்து இருக்க கூடாது. இந்த தகுதிகள் உள்ளவர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அந்த வகையில் ஒவ்வொரு வார்டுக்கும் 5 பகுதி சபை உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
இன்று (செவ்வாய்க்கிழமை) மாநகராட்சி முழுவதும் 300 இடங்களில் பகுதி சபை கூட்டம் நடைபெற உள்ளது. இதற்கான இடங்கள் மற்றும் ஒவ்வொரு கூட்டத்துக்கும் அதிகாரிகளும் நியமிக்கப்பட்டு உள்ளனர். காலை 10 மணிக்கு இந்த கூட்டம் தொடங்கும். இந்த கூட்டத்தில் பொதுமக்கள் அந்தந்த பகுதியில் உள்ள குறைகளை தெரிவிக்கலாம். அதனை மாநகராட்சியில் தெரிவிக்கலாம்' என்று கூறினார்.
கலந்து கொண்டவர்கள்
கூட்டத்தில் மாநகராட்சி செயற்பொறியாளர் அசோகன், மாநகர நல அலுவலர் அருண்குமார், உதவி செயற்பொறியாளர் சரவணன் மற்றும் அலுவலர்கள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.