தூத்துக்குடி மாவட்டத்தில் போக்குவரத்து போலீசாருக்கு சட்டையில் அணியும் நவீன கேமிரா

தூத்துக்குடி மாவட்டத்தில் போக்குவரத்து போலீசாருக்கு சட்டையில் அணியும் நவீன கேமிராவை போலீஸ் சூப்பிரண்டு பாலாஜிசரவணன் வழங்கினார்.
தூத்துக்குடியில் வியாழக்கிழமை நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட போக்குவரத்து போலீசாருக்கு சட்டையில் அணியும் நவீன கேமிராக்களை போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் வழங்கினார்.
சட்டையில் அணியும் கேமிரா
தூத்துக்குடி மாவட்ட போலீசாரின் பயன்பாட்டுக்காக தமிழக அரசு ரூ.1 லட்சத்து 34 ஆயிரம் மதிப்புள்ள சட்டையில் அணியக்கூடிய நவீன கேமிராக்களை வழங்கி உள்ளது. இந்த கேமிராக்கள் போக்குவரத்து சிக்னல்களில் பணியாற்றும் போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் வியாழக்கிழமை வழங்கி பேசினார்.
அப்போது, இந்த கேமிராக்களை போக்குவரத்து போலீசார் தங்கள் சட்டையில் அணிந்து கொண்டு, தங்களது பணிகளை மேற்கொள்ளும்போது அந்த இடத்தில் நடைபெறும் சம்பவங்களை வீடியோ, ஆடியோ, புகைப்படம் ஆகியவற்றை பதிவு செய்யவும், பதிவு செய்தவற்றை சேமிக்கவும் முடியும். போலீஸ் வாகன சோதனை, ரோந்து செல்லுதல், போக்குவரத்து சீர் செய்தல் போன்ற போலீசாரின் பல்வேறு வகையான பணிகளுக்கும் இதை பயன்படுத்திக் கொள்ளலாம். இது காவல்துறையினருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், இதனை போலீசார் முறையாக பயன்படுத்த வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.
கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சியில் தூத்துக்குடி தொழில்நுட்ப பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா, சப்-இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு, தூத்துக்குடி மத்தியபாகம் போக்குவரத்து பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.