தூத்துக்குடியில்மீனவர்களுக்கு பாதுகாப்பு பயிற்சி

தூத்துக்குடியில் மீனவர்களுக்கு பாதுகாப்பு பயிற்சி நடக்கிறது.
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் மீன்பிடித் தொழில் நுட்பவியல் மற்றும் மீன்வளப் பொறியியல் துறையும், கன்னியாகுமரி மாவட்ட திறன் மேம்பாட்டு பயிற்சி அலுவலகமும் இணைந்து கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களுக்கு மீன்பிடி படகு என்ஜின் பராமரிப்பு மற்றும் கடலில் மீனவர்களின் பாதுகாப்பு குறித்த ஒருவார பயிற்சியை நடத்துகின்றன.
இதன் தொடக்க விழா தூத்துக்குடி மீன்பிடித் துறைமுக வளாகத்தில் நேற்று நடந்தது. உதவிப் பேராசிரியர் மாரியப்பன் வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் அகிலன் தலைமை தாங்கினார். தமிழக அரசின் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கன்னியாகுமரி மண்டல துணை இயக்குநர் காசிநாதபாண்டியன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பயிற்சியை தொடங்கி வைத்து பேசினார். மீன்பிடித் தொழில் நுட்பவியல் மற்றும் மீன்வளப் பொறியியல் துறை தலைவர் நீதிச்செல்வன், கன்னியாகுமரி மாவட்ட திறன் மேம்பாட்டு பயிற்சி மைய உதவி இயக்குநர் லட்சுமிகாந்தன், கல்லூரி மீன்வள விரிவாக்கத்துறை தலைவர் சுஜாத்குமார் ஆகியோர் பயிற்சி குறித்து விளக்கி பேசினார்.
இந்த பயிற்சியில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சார்ந்த 20 மீனவர்கள் கலந்து கொண்டனர். உதவிப் பேராசிரியர் ரவிக்குமார் நன்றி கூறினார். முதுநிலை ஆராய்ச்சியாளர் அர்ச்சனா நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்.
இந்த பயிற்சியின் போது கடல்சார் மின்னணுச் சாதனங்களைக் கையாளுதல், கடலில் முதலுதவி மற்றும் கடலில் மீனவர் பாதுகாப்பு, கடல் வானிலை, மாலுமிக் கலைவரை படங்கள், ஆயிரங்கால் தூண்டில் வடிவமைப்பு, மாலுமிக்கலை ஒலிச் சமிக்கைகள் மற்றும் கடல் பயண விதிகள், தீயணைப்பு முறைகள் மற்றும் செயல்விளக்கம், மீன்பிடிப் படகுகளில் மீன்களைக் கையாளுதல் ஆகிய தலைப்புகளில் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன இந்த பயிற்சி வரும் 11-ந் தேதி வரை நடக்கிறது.