தூத்துக்குடியில்தமிழ் ஆட்சிமொழி விழிப்புணர்வு பேரணி

தூத்துக்குடியில் தமிழ் ஆட்சிமொழி விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியை கலெக்டர் செந்தில்ராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடியில் தமிழ் ஆட்சிமொழி சட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் செந்தில்ராஜ் நேற்று காலையில் தொடங்கி வைத்தார்.
தமிழ் ஆட்சிமொழி சட்டம்
தமிழ் ஆட்சி மொழிச்சட்டம் 27.12.1956-ம் ஆண்டு இயற்றப்பட்டது. இதனை நினைவு கூறும் வகையில் ஒருவாரம் ஆட்சிமொழிச்சட்ட வாரம் கொண்டாடப்படும் என்று தமிழக அரசு சார்பில் சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று முதல் வருகிற 28-ந் தேதி வரை ஒரு வாரம் ஆட்சிமொழி சட்டவாரமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாட்களில் பல்வேறு கருத்தரங்குகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
பேரணி
முதல்கட்டமாக நேற்று காலையில் ஆட்சிமொழி சட்ட வார விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.
தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து தொடங்கிய பேரணியை கலெக்டர் செந்தில்ராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணி பாளையங்கோட்டை ரோடு வழியாக சென்று குரூஸ்பர்னாந்து சிலை அருகே முடிவடைந்தது. இதில் குறைந்த அளவிலான மாணவ, மாணவிகள் மட்டும் கலந்து கொண்டு பேரணியாக சென்றனர். இதனால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
பேரணி தொடக்க நிகழ்ச்சியில் தமிழ்வளர்ச்சித் துறை துணை இயக்குநர் மு.சம்சுதீன், தூத்துக்குடி தாசில்தார் செல்வக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.