புதிய கட்டிடங்கள் திறப்பு விழா

நெல்லை பல்கலைக்கழகம்- அரசு மகளிர் கல்லூரியில் ரூ.9 கோடியில் புதிய கட்டிடங்கள் திறப்பு விழா நடந்தது
பேட்டை:
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ரூ.4.23 கோடியில் அதிநவீன கருவியியல் மைய கட்டிடம் மற்றும் ரூ.1.03 கோடியில் ஆண்கள் விடுதிக்கான நவீன சமையலறையுடன் கூடிய உணவுக்கூடம் அமைக்கப்பட்டு திறப்பு விழா நடந்தது. சென்னையில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக்காட்சி மூலம் புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார். விழாவில் பல்கலைக்கழக துணைவேந்தர் பிச்சுமணி, பதிவாளர் அண்ணாதுரை மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோன்று நெல்லை ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் ரூ.3.80 கோடியில் 20 வகுப்பறைகளுடன் கூடிய புதிய கட்டிடம் கட்டப்பட்டு திறப்பு விழா நடந்தது. புதிய கட்டிடத்தை காணொலிக்காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். விழாவில் கல்லூரி முதல்வர் மைதிலி, நெல்லை மண்டல தலைவர் மகேசுவரி, பொதுப்பணித்துறை என்ஜினீயர் நல்லசிங் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.