காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1.10 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை தொடருகிறது
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு ஒரு லட்சத்து 10 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் 12 மாவட்டங்களுக்கு ெவள்ள அபாய எச்சரிக்கை தொடருகிறது.
மேட்டூர்,
மேட்டூர் அணை
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன்எதிரொலியாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் காலை அணைக்கு வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து நேற்று காலை வினாடிக்கு ஒரு லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது. மாலையில் வினாடிக்கு ஒரு லட்சத்து 10 ஆயிரம் கனஅடியாக மீண்டும் அதிகரித்தது.
இதையடுத்து அணையில் இருந்து அதே அளவு தண்ணீர் உபரிநீராக வெளியேற்றப்படுகிறது. அந்த வகையில், அணையை ஒட்டி அமைந்துள்ள நீர் மின்நிலையங்கள் வழியாக வினாடிக்கு 21 ஆயிரத்து 500 கனஅடி வீதமும், அணையின் உபரிநீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக வினாடிக்கு 88 ஆயிரத்து 500 கனஅடி வீதமும், கால்வாய் பாசன தேவைக்காக வினாடிக்கு 200 கனஅடி வீதமும் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
வெள்ள அபாய எச்சரிக்கை
அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு ஒரு லட்சம் கனஅடிக்கு மேல் அதிகரித்துள்ளதால், பொதுப்பணித்துறை சார்பில் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், கடலூர், மயிலாடுதுறை ஆகிய 12 மாவட்டங்களுக்கு 2-வது முறையாக வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்ந்து விடப்பட்டு உள்ளது. மேலும் அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கும் இது குறித்து பொதுப்பணித்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் காவிரி கரையையொட்டி வசிக்கும் பொதுமக்கள் தாழ்வான பகுதிகளில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. 16 கண் மதகுகள் வழியாக வினாடிக்கு 88 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் 16 கண் பாலம் அருகே அமைக்கப்பட்டுள்ள புதிய பாலத்தின் மீது நின்று, மேட்டூர் அணையின் அழகை கண்டு ரசிக்க சுற்றுலா பயணிகள் கூட்டம் மீண்டும் அதிகரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.