சர்வாதிகாரத்திற்கு எதிராக இந்திய மக்கள் திரும்பி உள்ளனர்


சர்வாதிகாரத்திற்கு எதிராக இந்திய மக்கள் திரும்பி உள்ளனர்
x
தினத்தந்தி 29 March 2023 12:15 AM IST (Updated: 29 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சர்வாதிகாரத்திற்கு எதிராக இந்திய மக்கள் படிப்படியாக திரும்பி வருகின்றனர் என்று ஆ.ராசா எம்.பி. குன்னூரில் தெரிவித்தார்.

நீலகிரி

குன்னூர்,

சர்வாதிகாரத்திற்கு எதிராக இந்திய மக்கள் படிப்படியாக திரும்பி வருகின்றனர் என்று ஆ.ராசா எம்.பி. குன்னூரில் தெரிவித்தார்.

நலத்திட்ட உதவிகள்

இந்திய தேயிலை வாரியம் சார்பில், சிறு தேயிலை விவசாயிகளின் நலன் கருதி, மேம்பட்ட விவசாயம் குறித்த விழிப்புணர்வு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி குன்னூரில் உள்ள உபாசி அரங்கில் நடைபெற்றது. இதற்கு நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித், இந்திய தேயிலை வாரிய நிர்வாக இயக்குனர் முத்துக்குமார், இண்ட்கோசர்வ் தலைமை நிர்வாக அலுவலர் மோனிகா ராணா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சிக்கு ஆ.ராசா எம்.பி. தலைமை தாங்கி விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிதி ஆண்டில் இதுவரை 1,653 விவசாயிகளுக்கு ரூ.2 கோடியே 68 லட்சம், 37 குழுக்களுக்கு ரூ.1 கோடியே 45 லட்சம் என ரூ.4¼ கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு உள்ளது.

ஜனநாயகத்திற்கு எதிரானது

தொடர்ந்து ஆ.ராசா எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்திய அரசாங்கம் ராகுல்காந்தியை தண்டிக்க வேண்டும் என்று புதிய சட்டவியல் கோட்பாட்டை நிறுவி மறைமுகமாக தண்டித்து இருக்கின்றனர். மோடி அரசாங்கத்தில் நாடாளுமன்றத்திற்கு எந்தவித மதிப்பும் கிடையாது. இந்தியாவில் உள்ள 140 கோடி மக்களின் உணர்வு வெளிப்படும் முக்கியமான ஓர் இடம் நாடாளுமன்றம் ஆகும்.

இந்திய மக்களின் உணர்வை நரேந்திர மோடி ஒரு பொருட்டாக எண்ணியதில்லை. வரையறுக்கப்பட்ட குற்றவியல் சட்டத்தை தூக்கி எறிந்துவிட்டு, புதிய குறுக்கு வழியில் தண்டிக்க வேண்டும் என்ற எண்ணம் ஜனநாயகத்திற்கு எதிரானது. எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து நேரடியாகவும், மறைமுகமாகவும் எதிர்க்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. தற்போது இந்திய மக்கள் சர்வாதிகாரத்திற்கு எதிராக ஜனநாயக சக்திகளின் எதிரிகளுக்கு எதிராக படிப்படியாக திரும்பி வருகின்றனர். 2024 நாடாளுமன்ற தேர்தலில் இந்த பிரச்சினை வெளிப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story