ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் ஷட்டர்கள் மாற்றும் பணியை தலைமை பொறியாளர் ஆய்வு

ஓசூர்:
ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணையின் மதகுகளின் ஷட்டர்கள் பழுதடைந்தன. அதனை சீரமைக்க கெலவரப்பள்ளி அணை பாதுகாப்பு மற்றும் புனரமைப்பு திட்டத்தில் ரூ.26 கோடி ஒதுக்கப்பட்டது. மேலும் 7 ஷட்டர்களையும் மாற்றும் வகையில் அணையின் நீர்மட்டத்தை 24 அடியாக குறைக்க அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி கடந்த 24-ந் தேதி முதல் அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் கூடுதலாக வெளியேற்றப்பட்டது. தற்போது அணையின் மொத்த உயரமான 44.28 அடியில் 24.30 அடியாக நீர்மட்டம் உள்ளது. இதற்கிடையே ஷட்டர்களை மாற்றும் வகையில் பழைய ஷட்டர்களை அகற்றும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது. இதனை சென்னை நீர்வளத்துறை தலைமை பொறியாளர் அசோகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். இந்த பணிகள் 2 ஆண்டுகள் வரை மேற்கொள்ளும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ள நிலையில் ஓராண்டுக்குள் பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.