ரூ.16.33 லட்சம் இரும்பு குழாய்கள் லாரியில் கடத்தல்

ஓசூரில் போலி ஆவணங்கள் கொடுத்து ரூ.16.33 லட்சம் மதிப்புள்ள இரும்பு குழாய்களை லாரியில் கடத்திய நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
ஓசூர்:
ஓசூரில் போலி ஆவணங்கள் கொடுத்து ரூ.16.33 லட்சம் மதிப்புள்ள இரும்பு குழாய்களை லாரியில் கடத்திய நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவனம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அண்ணாமலை நகர் பேங்கர் காலனியை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 52). இவர் ஓசூரில் தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த 28.8.2022 அன்று லாரி டிரைவர் ஒருவர், இவரது டிரான்ஸ்போர்ட் நிறுவனத்திற்குவந்தார்.லாரியில் லோடு ஏற்றி செல்ல அனுமதிக்குமாறும், ஏதேனும் சரக்குகள் இருந்தால் தகவல் தெரிவிக்குமாறும் கூறினார். இதை நம்பிய செல்வகுமார், அந்த டிரைவர் எடுத்து வந்த ஆவணங்களை பார்த்தார். பின்னர் ஓசூர் கதிரேப்பள்ளியில் உள்ள கம்பெனி ஒன்றிற்கு சென்று சரக்கை ஏற்றி கொண்டு திருப்பத்தூர் செல்லுமாறு கூறினார்.
இரும்பு குழாய்கள் கடத்தல்
இதையடுத்து சம்பந்தப்பட்ட லாரி டிரைவரும், லாரியை அந்த நிறுவனத்திற்கு கொண்டு சென்று அங்கிருந்த 19.540 டன் இரும்பு குழாய்களை ஏற்றிக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். ஆனால் குறிப்பிட்டபடி அந்த லாரி திருப்பத்தூரில் உள்ள இரும்பு மற்றும் ஹார்டுவேர் நிறுவனத்திற்கு செல்லவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த செல்வகுமார் சம்பந்தப்பட்ட லாரியின் டிரைவர் எண்ணை தொடர்பு கொண்டார். அப்போது அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து அவர் கொடுத்த ஆவணங்களை செல்வகுமார் மீண்டும் சரிபார்த்தார். அப்போது அவை போலி ஆவணங்கள் என்பதும், அந்த நபர் இரும்பு குழாய்களை கடத்தி சென்றதும் தெரிய வந்தது.
வலைவீச்சு
லாரியில் கொண்டு செல்லப்பட்ட இரும்பு குழாய்களின் மதிப்பு ரூ.16 லட்சத்து 33 ஆயிரம் ஆகும். இது தொடர்பாக தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவன உரிமையாளர் செல்வகுமார் ஓசூர் அட்கோ போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேல் வழக்குப்பதிவு செய்து அந்த மர்ம நபரை வலைவீசி தேடி வருகிறார்.