'ஒரே நாடு ஒரே போலீஸ் சீருடை' சாத்தியமா?

பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்து இருக்கும் ‘ஒரே நாடு ஒரே போலீஸ் சீருடை' என்ற யோசனை சாத்தியப்படுமா? என்பது குறித்து ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரிகள், பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசு 'ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு' திட்டத்தை கடந்த 2019-ம் ஆண்டு அமல்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக, 'ஒரே நாடு ஒரே தேர்தல்', ஒரே நாடு ஒரே மொழி', 'ஒரே நாடு ஒரே வரி', 'ஒரே நாடு ஒரே நுழைவுத்தேர்வு' என்ற வரிசையில் இப்போது 'ஒரே நாடு ஒரே காவல்துறை சீருடை' என்ற கோஷத்தை மத்திய அரசு முன் வைத்துள்ளது.
சில தினங்களுக்கு முன்பு நடந்த மாநில உள்துறை மந்திரிகளின் கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி பேசும்போது, "நாடு முழுவதும் போலீசாருக்கு ஒரே சீருடை வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும். இது சட்ட அமலாக்க பிரிவினருக்கு ஒரு பொதுவான அடையாளத்தை அளிக்கும். இதன்மூலம் காவல்துறை பணியாளர்களை எளிதில் அடையாளம் காண முடியும். 'ஒரே நாடு ஒரே போலீஸ் சீருடை' என்பதை உங்கள் கவனத்துக்கு ஒரு சிந்தனையாக முன்வைக்கிறேன்" என்றார்.
எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு
பிரதமரின் இந்த யோசனைக்கு, எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மத்திய அரசு தனது அதிகாரத்தை ஒரு குடைக்குள் கொண்டுவந்து, மாநிலங்களின் அதிகாரத்தை பறிக்க நினைப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. இந்தியாவில் காவல் துறை என்ற அமைப்பு 1861-ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் கொண்டுவரப்பட்டது. இந்திய காவல் பணி (ஐ.பி.எஸ்.) அதிகாரிகள் அணியவேண்டிய சீருடை தொடர்பாக மத்திய அரசு விதிகளை உருவாக்கியுள்ளது.
அதே நேரத்தில், இந்திய காவல் பணியை சாராத போலீசாரின் சீருடைகளை அந்தந்த மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் தங்களுக்கு தகுந்தாற்போல வடிவமைத்துக்கொள்கின்றன.
நாடு சுதந்திரம் அடைந்த பின்னரும் தமிழகத்தில், போலீசாரின் சீருடைகளில் மாற்றம் கொண்டுவரப்படவில்லை. ஏட்டுகள், தலைமை ஏட்டுகள், சப்-இன்ஸ்பெக்டர்கள் வரை அரைக்கால்சட்டை மற்றும் நீளமான தொப்பி அணிந்து பணியாற்றி வந்தனர். 1973-ம் ஆண்டு தமிழகத்தில் போலீசாரின் சீருடையில் மாற்றம் கொண்டுவரப்பட்டது.
வேறுபாடு
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு போலீசார் காக்கி சீருடையும், போக்குவரத்து போலீசார் வெள்ளை நிற சட்டையும், காக்கி 'பேண்ட்'டும் அணிந்து பணியாற்றி வருகின்றனர். மேற்கு வங்காளத்தில் போலீசார் வெள்ளை நிற சீருடையிலும், புதுச்சேரியில் காக்கி சீருடையுடன் சிவப்பு நிற தொப்பியும் அணிகிறார்கள். இதேபோல டெல்லி, உத்தரபிரதேசம், கர்நாடகா, மராட்டியம், ஜம்மு-காஷ்மீர் என ஒவ்வொரு மாநிலங்களிலும் போலீஸ் சீருடைகளில் வேறுபாடுகள் இருக்கின்றன.
மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் அந்தந்த மாநிலங்களில் நிலவும் தட்பவெப்பநிலை, கலாசாரம், மாநில கொள்கை உள்ளிட்ட பல்வேறு சூழலுக்கு ஏற்ப போலீசாரின் சீருடைகளில் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளன.
இந்தநிலையில், மத்திய அரசு இப்போது முன்வைத்துள்ள 'ஒரே நாடு ஒரே போலீஸ் சீருடை' என்ற யோசனை சாத்தியமா? என்பது குறித்து தமிழகத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற மூத்த போலீஸ் அதிகாரிகளும், பொதுமக்களும் தங்களுடைய கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
அதன் விவரம் வருமாறு:-
சாத்தியம் இல்லை
ஓய்வுபெற்ற போலீஸ் டி.ஜி.பி. மு.ரவி:- மாநிலங்களுக்கு இடையே ஒரே மாதிரியான காக்கி சீருடை இருந்தாலும், நிற வேறுபாடு இருக்கிறது. அந்தந்த மாநிலங்களில் நிலவும் தட்பவெப்ப சூழலுக்கு ஏற்பதான் சீருடைகளை முடிவு செய்ய வேண்டும். தமிழகத்தை பொறுத்தமட்டில் வெயில் அதிகமாக இருக்கும். அதற்கு ஏற்றவாறு நமது சீருடை வடிவமைப்பு செய்யப்பட்டு இருக்கிறது. மலைப்பிரதேசமான ஊட்டியில் உள்ள நமது போலீசாருக்கு சீருடையில் மாற்றம் இருக்கிறது. நுண்ணறிவு பிரிவு, பொருளாதார குற்றப்பிரிவு உள்பட 3-ல் ஒரு பங்கு போலீசாருக்கு சீருடையே கிடையாது. ஒரே மாநிலத்தில் உள்ள போலீசார் இடையே சீருடையில் இத்தனை மாற்றம் இருக்கிறது. அப்படி இருக்கும்போது, அகில இந்திய அளவில் போலீசாருக்கு ஒரே சீருடை என்பது நடைமுறைக்கு சாத்தியமற்றது. வேற்றுமையில் ஒற்றுமைதான் நம்முடைய பலம். அதன்படி, மாநிலங்களில் நிலவும் தட்பவெப்ப சூழலுக்கு ஏற்ப சீருடைகள் இருக்க வேண்டும்.
நடைமுறைக்கு பொருந்தாது
ஓய்வுபெற்ற போலீஸ் டி.ஜி.பி. திலகவதி:- ஒரே நாடு ஒரே சீருடை என்பது சாத்தியப்படாத ஒன்று. ஒவ்வொரு மாநிலத்திலும் அவர்களின் தனித்தன்மையை காட்டுவதற்காக, போலீசாரின் சீருடையில் சிறிய மாற்றங்கள் செய்திருக்கிறார்கள். எல்லா மாநிலங்களும் ஒரே நாடு ஒரே போலீஸ் சீருடையை ஏற்றுக்கொள்ளாது. தமிழகத்தை எடுத்துக்கொண்டால், போக்குவரத்து போலீசார், இரவில் வாகன ஓட்டிகளுக்கு தெரியவேண்டும் என்பது உள்பட பாதுகாப்பு கருதி வெள்ளை நிற சீருடை அணிந்திருக்கிறார்கள். கமாண்டோ படைகள் வேறு சீருடையில் இருப்பார்கள். மாநில போலீசின் படைபிரிவுகளிலேயே வேறு வேறு சீருடைகள் இருக்கிறது.
இதேபோல மத்திய அரசு போலீஸ் பிரிவுகளிலும் ஒரே மாதிரியான சீருடை இல்லை. அதனால் மாநிலங்கள் ஒரே போலீஸ் சீருடை என்பதை ஏற்றுக்கொள்வது கடினம். அதனால் இது நடைமுறைக்கு பொருந்தாது என்று கருதுகிறேன்.
12 நாள் விடுமுறையை அமல்படுத்த...
ஓய்வுபெற்ற துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ்:-
ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த மாநிலங்களில் நிலவும் தட்பவெப்ப சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் காவல்துறையினருக்கு சீருடை வழங்கப்பட்டிருக்கிறது. ஒரே நாடு ஒரே போலீஸ் சீருடை என்பதை எல்லா மாநிலங்களிலும் கொண்டு வருவது என்பது நடைமுறைக்கு சாத்தியப்படாது. எங்களைப்போன்ற ஓய்வுபெற்ற போலீசாரின் ஒட்டுமொத்த கருத்து என்பது, இந்த நடைமுறை தேவையில்லாதது. இதற்கு பதிலாக காவல்துறையில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்ப விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளலாம். காவல்துறையினருக்கு ஓய்வு என்பதே கிடையாது. அவர்களுக்கு அவ்வப்போது ஓய்வு அளிக்கும் திட்டத்தை கொண்டு வரலாம். வருடத்திற்கு 12 நாள் விடுமுறையை முறையாக அமல்படுத்த வேண்டும். அதுபோல் வருடத்திற்கு 2 முறை உயர் அதிகாரிகள் மூலம், போலீசாரின் குறைகளை கேட்டறிந்து அதற்கு தீர்வு காண வேண்டும். இன்றைக்கு சாலையில் நின்று பணி செய்யும் அடிமட்ட போலீசார், எவ்வளவோ மனக்குறையுடன், மனஅழுத்தத்துடன் பணியாற்றி வருகின்றனர் என்பது யாருக்கும் தெரியாது. அதுபோல் காவல்துறையினரின் குடும்ப சூழ்நிலையை கருதி வெகுதொலைவில் உள்ள வெளிமாவட்டங்களுக்கு பணியிட மாற்றம் செய்வதை தவிர்க்க வேண்டும். முக்கியமாக அரசியல் தலையீடு இல்லாமல் சுதந்திரமாக காவல்துறையினர் செயல்பட வேண்டும்.
பணி மாறப்போவதில்லை
விழுப்புரத்தை சேர்ந்த முன்னாள் அரசு வக்கீல் ராதிகா:-
ஒரே நாடு ஒரே போலீஸ் சீருடை என்கிற இப்படியொரு மாற்றத்தை கொண்டு வர வேண்டிய அவசியமும், தேவையும் இல்லை. ஒவ்வொரு மாநிலத்திலும் காவல்துறையினர் அணியும் சீருடையில் சிறு, சிறு மாறுபாடுகள் இருக்கிறது. அது அம்மாநிலத்தின் ஒரு அடையாளமாக கருதப்படுகிறது. அதோடு அம்மாநிலத்தின் தட்பவெப்ப சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் சீருடை வழங்கப்படுகிறது. அந்த சீருடையை மாற்றி ஒரே சீருடை என்ற அடிப்படையில் கொண்டு வரப்போவதால் மக்கள் மனதில் என்ன மாற்றம் ஏற்படப்போகிறது. நாடு சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்தே காவல்துறையினர் அணிவிக்கும் சீருடையை மக்கள் பார்த்து பழகிவிட்டனர். மக்களுக்கு தேவை பாதுகாப்புத்தான். அதனை உறுதிப்படுத்தும் விதமாக மக்களின் பாதுகாப்பு அரணாக காவல்துறையினர் இருக்க வேண்டும். சீருடை மாறுவதால் அவர்களது பணி ஒன்றும் மாறப்போவதில்லை. அவர்களுக்கான அதிகாரமும் அதிகமாக கொடுக்கப்போவதில்லை. காவல்துறையினருக்கு சீருடையை மாற்றுவதால் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை. இதனால் மக்கள் மனதிலும் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை. இது தேவையில்லாதது, அவசியமற்றது. தற்போது இருக்கிறதே தொடரட்டும். காவல்துறையினரின் பணி இன்னும் மென்மேலும் சிறக்க என்னென்ன முயற்சிகள் எடுக்க வேண்டுமோ அதை எடுத்தால் மக்களின் வளர்ச்சியை மேம்படுத்துவதாக இருக்கும்.
ஒரே மரியாதை கிடைக்க...
உளுந்தூர்பேட்டை ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன்:-
ஒரே நாடு ஒரே சீருடை என்பது மிகச் சிறந்த ஒன்று. ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு வகையான சீருடை காவல்துறையினருக்கு வழங்கப்பட்டு உள்ளதால் ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்திற்கு விசாரணைக்காகவோ அல்லது குற்றவாளிகளை பிடிக்கச் செல்லும் போதோ பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. ஆந்திராவில் ஒரு சீருடை, கர்நாடகாவில் ஒரு சீருடை, தமிழ்நாட்டில் ஒரு சீருடை என இருப்பதால் சில நேரங்களில் காவல்துறையினர் இன்னல்களுக்கு ஆளாகின்றனர். மேலும் எந்த மாநிலத்திற்கு சென்றாலும் ராணுவ வீரர்கள் போல போலீசாருக்கும் ஒரே மரியாதை கிடைக்க வேண்டும் என்றால் ஒரே நாடு ஒரே சீருடை என்பது கட்டாயம் அமல்படுத்தப்பட வேண்டும்.
மன உளைச்சல்
திண்டிவனம் வினோதினி:-
காவல் துறையில் பணிச்சுமையால் பலர் மன உளைச்சலில் இருக்கிறார்கள். எனவே போலீசாரின் எண்ணிக்கையை உயர்த்தி, பணிச்சுமையை குறைத்து மன உளைச்சல் இல்லாமல் பணிபுரிய வழிவகை செய்யலாம். போலீசாரின் சீருடையை மாற்றுவதற்கு பதிலாக அவர்களுடைய எண்ணிக்கையை நாடு முழுவதும் அதிகரிக்கலாம். இவ்வாறு செய்தால் குற்றங்களின் எண்ணிக்கையாவது குறையும். போலீசார் எந்தவித சிரமமும் இன்றி, திறமையாக பணியாற்றுவதற்கு உகந்த சூழலை அவர்களுக்கு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். அவ்வாறு செய்தால்தான் மக்கள் பாதுகாப்பாக இருக்கமுடியும். அதே சமயத்தில், நாடு தழுவிய அளவில் போலீசாருக்கு ஒரே சீருடை வந்தால், உலக அரங்கில் இந்திய போலீசாருக்கு ஒரு அடையாளம் கிடைக்கும்.
அடையாளம் காணுவதில் சிரமம் இருக்காது
செஞ்சி குறிஞ்சிப்பை விஜயகுமார்:-
ஒரே நாடு ஒரே போலீஸ் சீருடை என்பது வரவேற்கத்தக்கது. ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்துக்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வெளி மாநிலம் செல்லும் சாமானியர்கள் போலீசாரை அடையாளம் காணுவதில் எந்த சிரமமும் இருக்கக்கூடாது. நாடு முழுவதும் வக்கீல்களுக்கு ஒரே சீருடை இருக்கிறது. இதே போன்று போலீசாருக்கும் ஒரே சீருடை இருந்தால் நன்றாகத்தான் இருக்கும். வெளிநாடுகளில் பல மாகாணங்கள் இருந்தாலும் ஒரே சீருடையில்தான் போலீசார் கம்பீரமாக காணப்படுகின்றனர். எனவே நம் நாட்டிலும் இந்த நடைமுறை வந்தால் இந்த மாநில போலீசார் என்று அடையாளம் இல்லாமல் இந்திய நாட்டின் போலீசார் என்ற பெருமை உலகளவில் சென்றடையும்.
வரவேற்பு
கள்ளக்குறிச்சியை சேர்ந்த ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம்:- இந்தியா முழுவதும் உள்ள போலீசார் அனைவரும் ஒரே சீருடை அணிய வேண்டும் என கூறியுள்ள அறிவிப்பு வரவேற்கத்தக்கது. ஒரே சீருடை அணிவதன் மூலம் ஒரு மாநிலத்தின் போலீசார் வேறு மாநிலத்துக்கு செல்லும்போது அந்த போலீசாரை பொதுமக்கள் ஒரு மாதிரியாக பார்ப்பார்கள். இதனால் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படாது. அனைத்து மாநிலத்திலும் சட்டம் ஒன்றாக இருக்கும்போது சீருடையும் ஒன்றாக இருக்கலாம்.