மாணவ-மாணவிகளின் கல்விக்கு உதவும் போது நிச்சயம் கிடைக்கும்
கோவிலுக்கு கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காத புண்ணியம் மாணவ-மாணவிகளின் கல்விக்கு உதவும்போது நிச்சயம் கிடைக்கும் என்று அமைச்சர் ஆர்.காந்தி பேசினார்.
கோவிலுக்கு கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காத புண்ணியம் மாணவ-மாணவிகளின் கல்விக்கு உதவும்போது நிச்சயம் கிடைக்கும் என்று அமைச்சர் ஆர்.காந்தி பேசினார்.
பரிசளிப்பு விழா
பள்ளி கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான கலைத் திருவிழா, பரிசளிப்பு விழா ராணிப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு, பல்வேறு வகையான கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டு, கலை திருவிழாவில் முதல் இடத்தை பிடித்த 437 மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் கலைத்துறையினை மேம்படுத்துவதற்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
அதன் அடிப்படையில் பள்ளி மாணவர்களுக்கான கலை நிகழ்ச்சிகள் அந்தந்த மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. இதற்கு முன்பு கலைஞர் ஆட்சிக் காலத்தில் இதுபோன்று நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
அவர் ஆட்சிக் காலத்தில் வள்ளுவர் கோட்டம், பூம்புகார், திருவள்ளுவர் சிலை போன்றவை அமைக்கப்பட்டன. கலைத்துறையையும், கலைஞர்களையும் ஊக்கப்படுத்தினார்.
முதன்மை மாநிலம்
இங்கு கலைத்திறனை வெளிப்படுத்தும் மாணவ-மாணவிகளை பார்க்கும்போது ஆச்சரியமாக உள்ளது. அரசு பள்ளி மாணவ -மாணவிகள் தனியார் பள்ளிகளை காட்டிலும் கலை துறையிலும் படிப்பிலும் சிறந்து விளங்குகின்றனர்.
இந்தியாவிலேயே தமிழகம் பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களில் முதன்மையான மாநிலமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. 9 திட்டத்துறைகளில் இந்தியாவிலேயே சிறப்பாக செயல்படுத்திய மாநிலம் என்ற நிலையை பிடித்து முதலிடத்தில் உள்ளது. இதற்கு காரணம் தமிழக முதலமைச்சரின் ஆட்சித் திறமையே ஆகும்.
கல்வித்துறையில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக பார்த்து பார்த்து ஏழை எளிய குழந்தைகளின் கல்வி அறிவு, எதிர்கால முன்னேற்றம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு புதுமையான திட்டங்களை தமிழக முதல்-அமைச்சர் செயல்படுத்தி வருகிறார். இதன் காரணமாகவே அரசு பள்ளியில் சேர்க்கை அதிகரித்து வருகிறது.
இந்த ஆண்டு அரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் வெற்றி பெற்ற 11 மாணவ- மாணவிகள் மருத்துவக் கல்லூரிகளில் படிப்பதற்கான இடம் பிடித்துள்ளனர்.
தேர்வான 11 நபர்களில் 3 நபர்கள் ஏற்கனவே புத்தகங்கள் வாங்கிவிட்ட நிலையில், மற்ற 8 மாணவ மாணவிகளுக்கும் மருத்துவம் படித்து முடிக்கும் வரைக்கும் நானே புத்தகம் வாங்கித் தர போகிறேன்.
புண்ணியம்
கோவிலுக்கு கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காத புண்ணியம் மாணவ -மாணவிகளின் கல்விக்கு இயன்ற உதவியை செய்யும் போது நிச்சயம் கிடைக்கும்.
இந்த கலை நிகழ்ச்சிகளில் பங்கு கொண்ட மாணவ-மாணவிகள் மாநில அளவில் வெற்றி பெறுவார்கள். இதற்கு முக்கிய காரணம் பள்ளி ஆசிரியர்கள் தான். ஆசிரியர்கள் மாணவர்களின் தனித்திறமையை அறிந்து அதனை ஊக்கப்படுத்த வேண்டும்.
அதேபோல் மாணவர்களும் ஆசிரியர்களை மரியாதைகளுடன் நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பல்வேறு வகையான கலைப் போட்டிகளில் முதலிடம் பெற்ற 437 மாணவ -மாணவிகள் வருகிற 27-ந் தேதி முதல் ஜூன் மாதம் வரை சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், கோவை மற்றும் மதுரை மாவட்டங்களில் நடைபெறும் மாநில அளவிலான கலைத்திறன் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.
மேலும் 1087 மாணவ மாணவிகள் மாவட்ட அளவில் நடைபெற்ற கலைத்திறன் போட்டிகளில் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களில் பிடித்துள்ளனர்.
நிகழ்ச்சியில் ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா, ஒன்றிய குழு தலைவர்கள் சேஷா வெங்கட், அசோக், புவனேஸ்வரி சத்தியநாதன், அனிதா குப்புசாமி, நகர மன்றத் தலைவர்கள் சுஜாதா வினோத், ஹரிணி தில்லை, முகமது அமீன், துணைத் தலைவர் ரமேஷ்கர்ணா, ஒன்றிய குழு துணை தலைவர் ராதாகிருஷ்ணன், மாவட்ட கல்வி அலுவலர் சுப்பாராவ் மற்றும் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.