ஜல்லிக்கட்டு இன்றுடன் நிறைவு பெறுகிறது


ஜல்லிக்கட்டு இன்றுடன் நிறைவு பெறுகிறது
x

இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு இன்றுடன் (புதன்கிழமை) நிறைவு பெறுகிறது. புதுக்கோட்டையில் கடந்த ஆண்டை விட 5 இடங்களில் குறைவாக நடந்துள்ளது.

புதுக்கோட்டை

ஜல்லிக்கட்டு

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி தொடங்கி நடைபெறுவது வழக்கம். மதுரை அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டுகள் உலகப்புகழ் பெற்றவையாகும். அதற்கு அடுத்தப்படியாக அதிகமாக ஜல்லிக்கட்டு நடைபெறும் வரிசையில் புதுக்கோட்டை மாவட்டம் முதல் இடத்தை தக்க வைத்து வருகிறது.

ஜனவரி மாதம் முதல் மே மாதம் 31-ந் தேதி வரை ஜல்லிக்கட்டு நடத்த அரசாணை பிறப்பிக்கப்பட்டு நடத்தப்பட்டு வருவதில், ஜல்லிக்கட்டு தொடங்குவதில் புதுக்கோட்டை மாவட்டம் முதல் இடத்தில் இருந்து வருகிறது. தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான முதல் ஜல்லிக்கட்டு கடந்த ஜனவரி மாதம் 8-ந் தேதி புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே தச்சங்குறிச்சியில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. அதன்பின் வரிசையாக ஜல்லிக்கட்டு, வடமாடு, மஞ்சுவிரட்டுகள் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது.

71 இடங்களில் நடந்துள்ளது

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு திருவிழாவானது இன்றுடன் (புதன்கிழமை) நிறைவு பெறுகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த ஆண்டில் ஜல்லிக்கட்டு 47 இடங்களிலும், வடமாடு மஞ்சுவிரட்டு 17 இடங்களிலும், மஞ்சுவிரட்டு 7 இடங்களிலும் என மொத்தம் 71 இடங்களில் நடைபெற்றுள்ளது.

கடந்த ஆண்டில் (2022) ஜல்லிக்கட்டு 50 இடங்களிலும், மஞ்சுவிரட்டு 12 இடங்களிலும், வடமாடு மஞ்சுவிரட்டு 14 இடங்களிலும் என மொத்தம் 76 இடங்களில் நடைபெற்றது. இதனை ஒப்பிடும் போது இந்த ஆண்டில் 5 இடங்கள் குறைந்துள்ளது. இதில் ஜல்லிக்கட்டு 3 இடங்களிலும், மஞ்சுவிரட்டு 5 இடங்களிலும் குறைந்தது. அதேநேரத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு 5 இடங்களில் அதிகமாக நடந்துள்ளது.

மஞ்சுவிரட்டில் பாதுகாப்பு குறைபாடு

இந்த ஆண்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டத்தில் மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் போலீஸ்காரர் உள்பட 2 பேர் பலியாகினர். இதேபோல ஆண்டு தொடக்கத்திலும் மஞ்சுவிரட்டில் பார்வையாளர் ஒருவர் மாடு முட்டி பலியானார். இதற்கு பாதுகாப்பு குறைபாடு என கூறப்பட்டது. அதேநேரத்தில் வடமாடு, ஜல்லிக்கட்டு நடைபெறுவதில் உரிய பாதுகாப்பு இருக்கும் பட்சத்தில் மஞ்சுவிரட்டில் மட்டும் போதுமான பாதுகாப்பு இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

திடலில் காளைகள் ஆங்காங்கே அவிழ்த்து விடப்படும் போது சீறிபாயும் காளைகள் பார்வையாளர்கள் கூட்டத்தில் புகுந்து மோதி விடுகிறது. இதன்காரணமாக மஞ்சுவிரட்டுக்கு அதிகமாக அதிகாரிகள் அனுமதி கொடுக்கவில்லை. இதனால் மஞ்சுவிரட்டு நடைபெறும் எண்ணிக்கை குறைந்துள்ளது. வருகிற ஆண்டில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

அடுத்த ஆண்டு ஜனவரியில்...

இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு திருவிழா இன்றுடன் இனிதே முடிவடைய நிலையில் இனி அடுத்த ஆண்டு (2024) ஜனவரி மாதம் முதல் தொடங்கும். இதற்கிடையில் ஜல்லிக்கட்டுக்கான தடை நிரந்தரமாக நீக்கப்பட்டதால் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story