ராணுவ வீரர் வீட்டில் நகை-பணம் திருட்டு

பள்ளிகொண்டா அருகே ராணுவ வீரர் வீட்டில் ரூ.2½ லட்சம் மதிப்புள்ள நகை-பணத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பள்ளிகொண்டா அருகே ராணுவ வீரர் வீட்டில் ரூ.2½ லட்சம் மதிப்புள்ள நகை-பணத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ராணுவ வீரர்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகா வடகத்திப்பட்டி கிராமம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் ஜனார்த்தனன் (வயது 40), ராணுவ வீரர். அவரது மனைவி துர்காதேவி. இவர்களுக்கு மகனும், மகளும் உள்ளனர். துர்காதேவி கூடநகரத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் தற்காலிக செவிலியராக வேலை செய்து வருகிறார்.
துர்காதேவி மகனையும், மகளையும் பள்ளிக்கு அனுப்பிவிட்டு, வீட்டை பூட்டிவிட்டு மாமியார் குப்பம்மாளிடம் வீட்டை பார்த்துக் கொள்ளும்படி கூறியுள்ளார். ஆனால் மாமியார் குப்பம்மாள் இளைய மகன் கேசவன் வீட்டிற்கு சென்றுவிட்டு, சிறிது நேரத்திற்கு பிறகு துணிகளை காய வைப்பதற்காக துர்காதேவி வீட்டுக்கு வந்துள்ளார்.
நகை-பணம் திருட்டு
அப்போது வீட்டின் முன் இருந்த இரும்பு கேட் உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்த போது கதவு மற்றும் பீரோக்கள் உடைக்கப்பட்டு இருந்தன.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் துர்காதேவி வீட்டுக்கு வந்து பார்த்த போது பீரோவில் இருந்த 4½ பவுன் நகை, ரூ.1 லட்சம் ரொக்கத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. திருட்டு போன நகை-பணத்தின் மொத்த மதிப்பு ரூ.2½ லட்சம் இருக்கும்.
இதுகுறித்த புகாரின் பேரில் பள்ளிகொண்டா போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, பட்டப்பகலில் ராணுவ வீரர் வீட்டில் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.