மொபட்டில் சென்ற பெண்ணை கீழே தள்ளி நகை பறிப்பு

மொபட்டில் சென்ற பெண்ணை கீழே தள்ளி மர்ம நபர்கள் நகையை பறித்து சென்றனர்.
சிங்கம்புணரி
சிங்கம்புணரி அருகே உள்ள முறையூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவருடைய மனைவி அமுதா (வயது 36). இவர் சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மகளிர் திட்ட மேலாளராக பணிபுரிகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று அமுதா சிவகங்கை மகளிர் திட்ட கலந்தாய்வு கூட்டத்திற்கு தனது மொபட்டில் சென்றார். பின்னர் அங்கிருந்து ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். கிருஷ்ணாபுரம் விலக்கு அருகே வந்த போது, மோட்டார் சைக்கிளில் வந்த 3 ஆசாமிகள், அமுதா மொபட் மீது மோதி அவரை தள்ளினர். கீழே விழுந்த நிலையில் அவரது தாலி சங்கிலியை பறிக்க முயன்றனர். அதை அவர் கெட்டியாக பிடித்து கொண்டு திருடன், திருடன் என சத்தம் போட்டார். இதனால் அந்த ஆசாமிகள் பாதி அறுந்த தாலி சங்கிலியுடன் அங்கிருந்து தப்பி ஓடினார்கள்.இதில் 3 பவுன் நகை பறி போய் இருந்தது. இது குறித்து அமுதா கொடுத்த புகாரின் பேரில் எஸ்.எஸ். கோட்டை போலீசார் தப்பி ஓடிய ஆசாமிகளை தேடி வருகின்றனர்.