ஓடும் பஸ்சில் மாணவியிடம் நகை திருட்டு

ஓடும் பஸ்சில் மாணவியிடம் நகை திருட்டு போனது.
அருப்புக்கோட்டை,
விளாத்திகுளம் அருகே குளவை புதூரை சேர்ந்தவர் கனகராஜ். இவரது மகள் நந்தினி (வயது 18). இவர் விருதுநகரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன் தினம் கல்லூரி முடிந்து ஊருக்கு செல்வதற்காக அரசு பஸ்சில் அருப்புக்கோட்டை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது பாலவநத்தம் அருகே பஸ் சென்று கொண்டிருந்த போது நந்தினி கழுத்தில் அணிந்திருந்த 1 பவுன் நகை மாயமானது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து மாணவி நந்தினி தாலுகா போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் மாணவியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் பஸ்சில் பயணம் செய்த போது எனது அருகில் 2 பெண்கள் நின்று கொண்டிருந்ததாகவும், பாலவநத்தம் வந்த போது அவர்கள் திடீரென பஸ்சை விட்டு கீழே இறங்கி சென்றதாகவும் தெரிவித்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.