செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஊர்வலம்

கிருஷ்ணகிரியில் செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஊர்வலத்தை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தொடங்கி வைத்தார்.
ஒலிம்பியாட் ஜோதி
சென்னை மாமல்லபுரத்தில் நாளை (வியாழக்கிழமை) முதல் வருகிற 10-ந் தேதி வரை 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு கோவையில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு கொண்டு வரப்பட்ட செஸ் ஒலிம்பியாட் ஜோதியை கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையத்தில் கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த ஒலிம்பியாட் ஜோதி ஊர்வலம் கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையத்தில் இருந்து இசை, கலை நிகழ்ச்சிகள், நாட்டுப்புற கலைஞர்களின் நடனத்துடன் அண்ணா சிலை, நீதிமன்ற சாலை, அரசு மகளிர் கல்லூரி சாலை என முக்கிய சாலைகளின் வழியாக மாவட்ட விளையாட்டு அரங்கத்திற்கு விளையாட்டு வீரர்கள் கொண்டு வந்தனர்.
விழிப்புணர்வு ஊர்வலம்
இதில் பள்ளி, கல்லூரி மாணவர்களின் அணிவகுப்பு, மகளிர் சுய உதவிக்குழுவினர் மஞ்சப்பை விழிப்புணர்வு மற்றும் இருசக்கர வாகனங்களுடன் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இதில், ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். மேலும், தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் சார்பில் செஸ் ஒலிம்பியாட் சின்னம் அச்சிடப்பட்ட மஞ்சப்பைகளை கலெக்டர் பொதுமக்களுக்கு வழங்கினார். தொடர்ந்து கலெக்டர், செஸ் ஒலிம்பியாட் ஜோதியை மாவட்டம் முழுவதும் கொண்டு செல்வதற்காக அலுவலர்களிடம் ஒப்படைத்தார்.
பின்னர் ஒலிம்பியாட் ஜோதி சூளகிரி, ஓசூர், கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை, கிருஷ்ணகிரி மற்றும் பர்கூர் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு கொண்டு சென்று, மாணவ, மாணவிகள் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வேடியப்பன், உதவி கலெக்டர் சதீஸ்குமார், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கு, மாவட்ட விளையாட்டு அலுவலர் உமாசங்கர், மாசு கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளர் வெங்கடேசன், முன்னாள் எம்.எல்.ஏ. செங்குட்டுவன், நகர்மன்ற தலைவர் பரிதாநவாப், துணைத் தலைவர் சாவித்திரி கடலரசுமூர்த்தி, தாசில்தார்கள் நீலமேகன், இளங்கோ, வெங்கடேசன், நகராட்சி ஆணையர் சரவணன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
ஓசூரில் வரவேற்பு
கிருஷ்ணகிரியில் இருந்து ஓசூர் சிப்காட் பகுதியில் உள்ள மகரிஷி வித்யா மந்திர் பள்ளிக்கு செஸ் ஒலிம்பியாட் ஜோதிக்கு பிரகாஷ் எம்.எல்.ஏ. மேயர் சத்யா ஆகியோர் வரவேற்பு அளித்தனர். இதில், துணை மேயர் ஆனந்தய்யா, தாசில்தார் கவாஸ்கர், மாவட்ட கல்வி அலுவலர் முனிராஜ், மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சீனிவாசன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வளர்மதி, பள்ளி தாளாளர் வெங்கட்ராம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.