ஓணம் பண்டிகை விடுமுறையையொட்டி பழனி முருகன் கோவிலுக்கு படையெடுத்த கேரள பக்தர்கள்

ஓணம் பண்டிகை விடுமுறையையொட்டி பழனி முருகன் கோவிலுக்கு கேரள பக்தர்கள் படையெடுத்தனர்.
உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் படையெடுப்பர். அதேபோல் வார விடுமுறை, சுபமுகூர்த்தம், தொடர் விடுமுறை நாட்களிலும் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து பக்தர்கள் அதிக அளவில் வருகை தருவார்கள். இந்தநிலையில் கேரளாவில் பிரசித்தி பெற்ற ஓணம் பண்டிகை நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. ஓணம் பண்டிகையை கொண்டாடி முடித்த பின்னர் சனி, ஞாயிறு என வாரவிடுமுறை என்பதால் கேரளாவில் இருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய பழனி முருகன் கோவிலுக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர். அந்தவகையில் பழனி முருகன் கோவிலில் நேற்று கேரள பக்தர்கள் வருகை அதிகமாக இருந்தது.
அவ்வாறு வந்த பக்தர்களில் பலர் நேர்த்திக்கடனாக முடிக்காணிக்கை செலுத்தினர். தொடர்ந்து தங்களது குடும்பத்தினருடன் மலையை சுற்றியுள்ள கிரிவீதிகளை வலம் வந்தனர். இதனால் பாதவிநாயகர் கோவில் பகுதி, அடிவாரத்தில் கூட்டம் காணப்பட்டது. பழனியில் சாமி தரிசனம் செய்த கேரள பக்தர்கள் பலர் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்ற வண்ணம் உள்ளனர். மேலும் இன்றும், நாளையும் பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக ஏராளமான பக்தர்கள் பழனி பகுதியில் உள்ள தங்கும் விடுதிகளில் அறை முன்பதிவு செய்துள்ளனர். இதனால் தங்கும் விடுதிகளில் அறைகள் கிடைக்காமல் வெளியூர் பக்தர்கள் தவித்தனர்.