கொள்ளிடம் கூட்டு குடிநீர் வழங்க வேண்டும்


கொள்ளிடம் கூட்டு குடிநீர் வழங்க வேண்டும்
x
தினத்தந்தி 6 April 2023 12:15 AM IST (Updated: 6 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ராதாநல்லூர் ஊராட்சியில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் வழங்க வேண்டும் என்று சீர்காழி ஒன்றியக்குழு கூட்டத்தில் உறுப்பினர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மயிலாடுதுறை

சீர்காழி:

ராதாநல்லூர் ஊராட்சியில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் வழங்க வேண்டும் என்று சீர்காழி ஒன்றியக்குழு கூட்டத்தில் உறுப்பினர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஒன்றியக்குழு கூட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சாதாரண கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் உஷா நந்தினி பிரபாகரன், ஆணையர்கள் இளங்கோவன், சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலாளர் பன்னீர்செல்வம் வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் உறுப்பினர்கள் பேசியதாவது:-

பகுதி நேர அங்காடி

ரிமா ராஜ்குமார்:- (அ.தி.மு.க.) :- அகணி ஊராட்சிக்குட்பட்ட மன்னன் கோவில் பகுதியில் பகுதி நேர அங்காடி திறக்க வேண்டும். நிம்மேலி ஊராட்சியில் ஈமக்கிரிகை மண்டபம் இல்லாமல் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

விஜயகுமார் (அ.தி.மு.க.):-திட்டை ரோட்டில் சின்னத்தம்பி நகர் முதல் காமாட்சி நகர் வரை சாலை மிகவும் மோசமாக உள்ளது. இந்த சாலைகளை சீரமைக்க வேண்டும்.

கூட்டு குடிநீர் திட்டம்

அறிவழகன் (சுயேச்சை):-ராதாநல்லூர் ஊராட்சியில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நான் கடந்த மூன்று ஆண்டுகளாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசி வருகிறேன் ஆனால் இதுநாள் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவே எனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளேன் என்றார்.

நடராஜன் (அ.தி.மு.க):-. நாட்டுக் கன்னி மண்ணியாறு வாய்க்காலில் உப்பு நீர் உட்புகாத வகையில் பத்து கோடி மதிப்பீட்டில் கதவணை கட்டப்பட்டுள்ளது. ஆனால் உப்பு நீர் ஊருக்குள் புகுந்து வருகிறது இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆணையர்;- பகுதி நேர அங்காடி, ஈமக்கிரிகை மண்டபம் உள்ளிட்ட வேலைகள் சட்டமன்ற, நாடாளுமன்ற நிதியின் கீழ் தான் செய்ய முடியும்.

தலைவர்:- நிதி நிலைக்கேற்ப உறுப்பினர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும். அரசிடம் கூடுதல் நிதி பெற்று வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

கூட்டத்தில் பொறியாளர்கள், மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பணி மேற்பார்வையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story