கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயி குடும்பத்துடன் உண்ணாவிரதம்

கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயி குடும்பத்துடன் உண்ணாவிரதம்
x

கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு அதிகாரிகள் கையகப்படுத்திய தனது நிலத்திற்கு இழப்பீடு தொகையை உடனடியாக வழங்க கோரி விவசாயி ஒருவர் குடும்பத்தினருடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு அதிகாரிகள் கையகப்படுத்திய தனது நிலத்திற்கு இழப்பீடு தொகையை உடனடியாக வழங்க கோரி விவசாயி ஒருவர் குடும்பத்தினருடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.

விவசாயி

எட்டயபுரம் தாலுகா எம். குமரபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம். விவசாயி. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு ஊரிலுள்ள தனது 80 சென்ட் நிலத்தை குளத்துக்காக அதிகாரிகள் கையகப்படுத்தினராம். ஆனால் உரிய இழப்பீடு தொகையை இதுவரை அதிகாரிகள் வழங்காமல் இழுத்தடிப்பு செய்து வருகின்றனராம். இழப்பீட்டுத் தொகை வழங்க கோரி எட்டையாபுரம் தாலுகா அலுவலகம், உதவி கலெக்டர் அலுவலகத்தில் பலமுறை மனு கொடுத்தும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.

இதை தொடர்ந்து நேற்று தனது மனைவி முருகேஸ்வரி, மகன் காமேஷ் மற்றும் கரிசல் பூமி வகைகள் சங்கத் தலைவர் வரதராஜன் ஆகியோருடன் சண்முகம் கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார்.

உண்ணாவிரதம்

அந்த அலுவலகம் முன்பு கையில் பாத்திரத்தை ஏந்தியவாறு அவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இவர்களை உதவி கலெக்டர் மகாலட்சுமி அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, இப்பிரச்சினை தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் பேசி தீர்வு காண்பதாகவும், விரைவில் இழப்பீடு தொகை வழங்க ஏற்பாடு செய்வதாகவும் உதவி கலெக்டர் உறுதி அளித்தார். இதை தொடர்ந்து அவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Next Story