தஞ்சை மாவட்டத்தில் 1.11 லட்சம் ஏக்கரில் குறுவை நடவு செய்ய இலக்கு


தஞ்சை மாவட்டத்தில் 1.11 லட்சம் ஏக்கரில் குறுவை நடவு செய்ய இலக்கு
x

தஞ்சை மாவட்டத்தில் 1.11 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது நாற்றங்கால் தயாரிப்பு மற்றும் எந்திர நடவுகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்:-

தஞ்சை மாவட்டத்தில் 1.11 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது நாற்றங்கால் தயாரிப்பு மற்றும் எந்திர நடவுகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

குறுவை சாகுபடி

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது. இங்கு குறுவை சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறுவது வழக்கும். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும். அதன்படி குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறக்கப்பட்டால் குறுவை சாகுபடி பரப்பளவு அதிகரித்து காணப்படும். தாமதமாக திறந்தால் குறுவை சாகுபடி பரப்பளவு குறைந்து சம்பா சாகுபடி பரப்பளவு அதிகரித்து காணப்படும்.

ஆனால் இந்த ஆண்டு சுதந்திரம் அடைந்த பின்னர் முதன் முறையாக மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் மே மாதத்திலேயே திறந்து விடப்பட்டது. இந்ததண்ணீர் கல்லணைக்கு 27-ந்தேதி வந்ததையடுத்து பாசனத்துக்கு காவிரி, வெண்ணாறு, கொள்ளிடம் ஆகிய ஆறுகளில் பிரித்து விடப்பட்டது. கல்லணைக்கால்வாயில் பாலப்பணிகள் நடைபெற்றதால் தண்ணீர் திறக்கப்படவில்லை. இந்த நிலையில் கல்லணைக்கல்வாயில் கடந்த 5-ந்தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

1.11 லட்சம் ஏக்கர் சாகுபடி

தஞ்சை மாவட்டத்தில் இந்த ஆண்டு 1 லட்சத்து 11 ஆயிரத்து 150 ஏக்கர் குறுவை நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு சாகுபடி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் மேட்டார் மூலம் ஏற்கனவே சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது ஆறுகளில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் சாகுபடி பணிகள் தீவிரம் அடைந்துள்ளன.

தஞ்சை மாவட்டத்தில் வெண்ணாறு, வடவாறு பாசன பகுதிகளில் தற்போது எந்திர நடவுப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்காக விளை நிலங்களை உழவு செய்து தயார் நிலையில் வைத்துள்ளனர். பல இடங்களில் நேரடி நெல் விதைப்பு மூலமும் குறுவை நெல் சாகுபடி நடைபெற்று வருகின்றன.

நாற்றங்கால் தயாரிப்பு

இதே போல் கல்லணைக்கால்வாய் பகுதிகளில் தற்போது தண்ணீர் விடப்பட்டுள்ளதால் ஆற்றுநீரை மட்டும் நம்பி சாகுபடி செய்யும் விவசாயிகள் தற்போது நாற்றங்கால் தயாரிக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். ஏராளமான விவசாயிகள் வெளி இடங்களில் இருந்து நெல் நாற்றுகளை விலைக்கு வாங்கி வந்தும் நடவு செய்தும் வருகிறார்கள்.


Next Story