வாலிபர் கொலை வழக்கில் தொழிலாளி கைது

நத்தம் அருகே தங்கையை திருமணம் செய்து கொடுக்காத ஆத்திரத்தில், வாலிபரை வெட்டிக்கொன்ற தென்னை மரம் ஏறும் தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
வாலிபர் வெட்டிக்கொலை
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள காசம்பட்டியை சேர்ந்தவர் கணேசன். அவருடைய மகன் ஜோதி (27). வெளிநாட்டில் வேலை செய்த இவர், கடந்த 6 மாதங்களாக சொந்த கிராமத்தில் விவசாயம் செய்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு தோட்டத்து வீட்டில் படுத்திருந்த ேஜாதி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து நத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும் கொலையாளியை பிடிக்க போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவின்பேரில், உதவி சூப்பிரண்டு அருண் கபிலன், இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தொழிலாளி கைது
இந்தநிலையில் ஜோதியின் குடும்பத்தினர் பயன்படுத்துகிற செல்போன்களில் பேசிய நபர்கள் குறித்து, சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் தனிப்படையினர் விசாரித்தனர். அப்போது ஜோதியின் தங்கை பிரியாவின் செல்போன் எண்ணில், காசம்பட்டி பகுதியை சேர்ந்த தென்னை மரம் ஏறும் தொழிலாளி செல்லம் என்ற பிரபாகரன் (30) அடிக்கடி பேசியது தெரியவந்தது.
இதனால் சந்தேகம் அடைந்த தனிப்படை போலீசார், பிரபாகரனை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர், ஜோதியை வெட்டிக்கொன்றதை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
திருமணம் செய்து கொடுக்காததால் ஆத்திரம்
கைதான பிரபாகரன் போலீசில் அளித்த வாக்குமூலத்தில், ஜோதியின் தங்கை பிரியாவை நான் காதலித்து வந்தேன். நாங்கள் 2 பேரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்தோம். இந்தநிலையில் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியை சேர்ந்த ஒருவருக்கு, பிரியாவை திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டிருப்பதாக கேள்விப்பட்டேன்.
உடனடியாக பிரியா வீட்டுக்கு சென்று, அவரை எனக்கு திருமணம் செய்து வைக்குமாறு கேட்டேன். ஆனால் பிரியாவின் அண்ணன் ஜோதி, எனக்கு பிரியாவை திருமணம் செய்து கொடுக்க மறுத்து விட்டார். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் அவரை தீர்த்து கட்ட முடிவு செய்தேன்.
தினமும் இரவில் ஜோதி, தோட்டத்து வீட்டில் படுத்து தூங்குவதை அறிந்து அங்கு சென்று அவரது கழுத்தில் அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்தேன் என்று கூறியிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
கொலை நடந்த 24 மணி நேரத்தில் கொலையாளியை, தனிப்படை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.