திண்டிவனம்-நகரி ரெயில் பாதை திட்டத்திற்கு அடுத்த மாத இறுதிக்குள் நிலம் கையகப்படுத்தும்; கலெக்டர் தகவல்


திண்டிவனம்-நகரி ரெயில் பாதை திட்டத்திற்கு அடுத்த மாத இறுதிக்குள் நிலம் கையகப்படுத்தும்; கலெக்டர் தகவல்
x

திண்டிவனம்-நகரி புதிய ரெயில் பாதை திட்டத்திற்கு திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் அடுத்த மாத இறுதிக்குள் நிலம் கையகப்படுத்தும் பணி முடிவடையும் என்று கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை

திண்டிவனம்-நகரி புதிய ரெயில் பாதை திட்டத்திற்கு திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் அடுத்த மாத இறுதிக்குள் நிலம் கையகப்படுத்தும் பணி முடிவடையும் என்று கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

கலெக்டர் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கலெக்டர் பா.முருகேஷ் ஆய்வு செய்தார். அப்போது அலுவலக வளாகத்தில் மரக்கன்று நட்டார். அதைத் தொடர்ந்து விபத்தில் உயிரிழந்த 5 நபர்களின் வாரிசுதாரர்களுக்கு அரசு வழங்கும் நிவாரண தொகை தலா ரூ.1 லட்சம் வழங்கினார்.

பின்னர் கலெக்டர் முருகேஷிடம், நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ரூ.40 மற்றும் ரூ.50 கட்டாயமாக தனி வசூல் செய்வதாக புகாா்கள் வருகிறது.

கலெக்டர் பதில்:- நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆன்லைன் மூலம் விவசாயிகளால் பதிவு செய்யப்பட்டு, பின்னர் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு 18 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேஷன் மூலம் வழங்கப்பட்ட சாப்ட்வேர் மூலம் விவசாயிகள் பதிவு செய்து வருகின்றனர். தற்ேபாது புகார்கள் எதுவும் இல்லை.

மத்திய அரசு திட்டம் மூலம் மத்திய அரசே நெல் கொள்முதல் செய்து, அதனை அரிசியாக திருப்பி நமக்கு வழங்குகின்றனர்.

எங்கெல்லாம் நேரடி நெல் கொள்முதல் நிலையம் தேவையோ, அங்கெல்லாம் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படும்.

மாவட்டத்தில் நெல் சாகுபடி ஒவ்வொரு பருவத்துக்கு ஏற்றவாறு மாறுபடுகிறது. தற்போது மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் மிகவும் குறைவு. கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க திட்டம் மூலம் 172 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு, 16 துறை அதிகாரிகள் ஒன்றிணைந்து பண்ணை குட்டை, வேளாண் உபகரணங்கள், விதைகள் உள்ளிட்டவைகளும் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.

விவசாயிகள் நெல் பயிரை மட்டும் சாகுபடி செய்யாமல் மணிலா மற்றும் சிறுதானியங்கள், காய்கறிகள், கீரை வகைகள், பழங்கள் உள்ளிட்ட பயிர் சாகுபடி செய்து பயன்பெற வேண்டும்.

அடுத்த மாதம் இறுதிக்குள்...

கேள்வி:- திண்டிவனத்தில் இருந்து வந்தவாசி, செய்யாறு, ஆரணி வழியாக ஆந்திர மாநிலம் நகரி வரை புதிய ெரயில் பாதை அமைக்கும் திட்ட பணி எந்த அளவில் உள்ளது.

கலெக்டர் பதில்:-

திண்டிவனம்-நகரி புதிய ெரயில் பாதை அமைக்கும் திட்டம் 2, 3 மாவட்டங்களை சேர்ந்தது. திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் அடுத்த மாதம் இறுதிக்குள் நிலம் கையகப்படுத்தும் பணி முடிவடைந்துவிடும். அதைத் தொடர்ந்து மற்ற மாவட்டங்களிலும் நில ஆர்ஜிதம் செய்யும் பணி முடிந்தவுடன் புதிய ெரயில் பாதை அமைக்கும் பணி நடைபெறும்.

கேள்வி:- ஆரணியில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் மற்றும் புறவழிச்சாலைகள் அமைக்கப்படுமா?

கலெக்டர் பதில்:- அதற்கான ஆய்வு நடைபெற்று வருகிறது. ஆய்வு அறிக்கை பொதுப்பணித்துறை மற்றும் தமிழக அரசுக்கும் அனுப்பி வைக்கப்படும். அதன் பின்னர் அரசு அறிவிக்கும்.

மாணவர்களை நல்வழிப்படுத்த வேண்டும்

கேள்வி:- சேவூரில் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தியது.

கலெக்டர் பதில்:- பாதிக்கப்பட்ட மாணவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான். ஆசிரியர்கள் மாணவனையும், பெற்றோரையும் அழைத்து அறிவுரை வழங்கி இருக்க வேண்டும். ஆனால் தொடர்ந்து புகார் வந்தது. அதன் காரணமாக துறை ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாணவர்களை நல்வழிப்படுத்த வேண்டும். போராட்டம் நடத்தும் அளவிற்கு அவர்களை தூண்டிவிடக்கூடாது என பெற்றோர்களுக்கும், பொதுமக்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஓட்டல்களில் அதிகாரிகள் ஆய்வு

கேள்வி:- ஆரணியில் தொடர்ந்து சைவ, அசைவ ஓட்டல்களில் தரமற்ற உணவு வழங்கப்படுகிறது என புகார் வருகிறது.

கலெக்டர் பதில்:- உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அந்த ஆய்வு அறிக்கை முடிவு வந்தவுடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தற்போது தற்காலிகமாக ஓட்டலுக்கு 'சீல்' வைக்கப்பட்டு உள்ளது. உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

அப்போது ஆரணி வருவாய் கோட்டாட்சியர் தனலட்சுமி, தாசில்தார்கள், ஊரக வளர்ச்சித்துறை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அலுவலர்கள் பலரும் உடனிருந்தனர்.


Next Story