வக்கீல் கொலை வழக்கில் கைதாகிஜெயிலில் இருந்தவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை

தூத்துக்குடியில் வக்கீல் கொலை வழக்கில் கைதாகி ஜெயிலில் இருந்தவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி வக்கீல் கொலையில் கைதாகி ஜெயிலில் இருந்தவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வக்கீல் கொலை
தூத்துக்குடி சோரீஸ்புரத்தைச் சேர்ந்தவர் வக்கீல் முத்துக்குமார் (48). இவர் கடந்த மாதம் 22-ந் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். 6 பேர் கோர்ட்டில் சரண் அடைந்து உள்ளனர். தொடர்ந்து மேலும் சிலரை தேடி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு வக்கீல் முத்துக்குமாரின் தம்பி சிவக்குமார் என்பவர் தூத்துக்குடி கோர்ட்டு அருகே வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் பீட்டர் என்பவர் கைது செய்யப்பட்டு ஜெயிலில் உள்ளார்.
விசாரணை
இந்த கொலை வழக்கில் கோர்ட்டுக்கு வந்த பீட்டர், வக்கீல் முத்துக்குமாரை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் முத்துக்குமார் கொலை வழக்கில் பீட்டரையும் போலீசார் சேர்த்து உள்ளனர். இதனை தொடர்ந்து ஜெயிலில் உள்ள பீட்டரை சிப்காட் போலீசார் 3 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். இதனால் தூத்துக்குடியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.