சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபட்டால் பெண்கள் விடுதியின் உரிமம் ரத்து செய்யப்படும்-கலெக்டர் ஸ்ரேயாசிங் எச்சரிக்கை


சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபட்டால் பெண்கள் விடுதியின் உரிமம் ரத்து செய்யப்படும்-கலெக்டர் ஸ்ரேயாசிங் எச்சரிக்கை
x

நாமக்கல் மாவட்டத்தில் மாணவிகள் மற்றும் பெண்களுக்கான விடுதி நடத்துவோர் சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபட்டால் அந்த விடுதியின் உரிமம் ரத்து செய்யப்படும் என கலெக்டர் ஸ்ரேயாசிங் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

நாமக்கல்

நாமக்கல்:

ஆலோசனை கூட்டம்

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்லும் பெண்களுக்கான விடுதிகள் மற்றும் இல்லங்கள் நடத்துபவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமை தாங்கி பேசியதாவது:-

தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் மற்றும் இல்லங்கள் சட்டத்தின்படி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான இல்லங்களை நடத்துபவர்கள் தங்களது விவரங்களை பதிவு செய்திருக்க வேண்டும். இந்த சட்டம் வருவதற்கு முன்பே இயங்கிவரும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் மற்றும் இல்லங்கள் அனைத்தும் இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட தினத்தில் இருந்து 2 மாத காலத்திற்குள் பதிவு செய்தல் வேண்டும்.

கண்காணிப்பு கேமரா

இல்லத்தின் அல்லது விடுதியின் உரிமையாளர் பணியாளர்களின் கல்வி தகுதி, விடுதியை நடத்தும் சங்கம் அல்லது அறக்கட்டளையின் பதிவு சான்றிதழ், புதுப்பித்தல் சான்றிதழ், சங்க விதிமுறைகள், நிர்வாக குழுவினரின் விவரங்கள், கட்டிடத்தின் வரைபடம், கட்டிடத்தின் உறுதி சான்றிதழ், தாசில்தாரால் வழங்கப்பட்ட கட்டிடத்தின் உரிமம், தீயணைப்பு துறையால் வழங்கப்பட்ட பாதுகாப்பு சான்றிதழ், சுகாதாரத்துறையினரால் வழங்கப்பட்ட சுகாதார சான்றிதழ் மற்றும் வசிப்பிட தகுதி சான்றிதழ், உணவு பாதுகாப்பு சான்றிதழ், வருடாந்திர அறிக்கைகள், விடுதியில் தினசரி வழங்கும் உணவு பட்டியல் உள்ளிட்ட விவரங்களுடன் கலெக்டருக்கு மனு அளிக்க வேண்டும்.

மேலும், தாங்கள் நடத்தும் விடுதி அல்லது இல்லம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட கட்டிடத்தில் மட்டுமே நடத்தப்பட வேண்டும். விடுதிகளில் ஆண், பெண் குழந்தைகளுக்கு தனித்தனியே 24 மணிநேர பாதுகாப்பு அளிக்க வேண்டும். 55 வயதுக்கு மேற்பட்ட ராணுவத்தினர், ஓய்வு பெற்ற காவல் துறையினரை பாதுகாவலராக நியமிக்கலாம். மகளிர் விடுதியில் பெண்கள் மட்டுமே பாதுகாப்பாளராக நியமிக்கப்பட வேண்டும்.

உரிமம் ரத்து

பார்வையாளர் பதிவேடு, விடுதியின் மேலாளர் விவரங்கள், குழந்தை அல்லது பெண்களின் பெற்றோர் விவரங்கள், பாதுகாவலர் விவரம் மற்றும் அவருக்கான அடையாள அட்டை விவரங்கள் வைத்திருக்க வேண்டும். சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபட்டால் உரிமம் ரத்து செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மாவட்ட கலெக்டரால் நியமிக்கப்படும் அலுவலர் எவரும் குழந்தைகள் மற்றும் பெண்கள் விடுதியில் எப்போது வேண்டுமானாலும் விடுதியை ஆய்வு செய்து தவறு இருப்பின் உரிமத்தை ரத்து செய்து நடவடிக்கை மேற்கொள்வார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி, முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, கல்லூரி கல்வி இணை இயக்குனர் ராமலட்சுமி, உதவி கலெக்டர்கள் மஞ்சுளா, இளவரசி உள்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story