நாங்குநேரி போல கழுகுமலையிலும் பரபரப்பு:பிளஸ்-1 மாணவர் மீதுவீடு புகுந்து தாக்குதல்

நாங்குநேரி போல கழுகுமலையிலும் பிளஸ்-1 மாணவர் மீது வீடு புகுந்து தாக்குதல் நடத்தப்பட்டது.
கழுகுமலை:
கழுகுமலையில் வீடு புகுந்து பிளஸ்-1 மாணவர் தாக்கப்பட்டார். இதுதொடர்பாக கல்லூரி மாணவர்கள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
நாங்குநேரி சம்பவம்
நெல்லை மாவட்டம் நாங்குநேரி பெருந்தெருவை சேர்ந்த பிளஸ்-2 மாணவர் சின்னத்துரை, அவருடைய தங்கை சந்திரா செல்வி ஆகியோர் வீடு புகுந்து மாணவர்கள் உள்ளிட்டோரால் அரிவாளால் வெட்டப்பட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த அவர்கள் பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாணவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினையில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. அந்த பரபரப்பு அடங்குவதற்குள் தற்போது மீண்டும் அதுபோன்ற தாக்குதல் சம்பவம் தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் நடந்துள்ளது.
அதுபற்றிய விவரம் வருமாறு:-
பிளஸ்-1 மாணவர்
கழுகுமலை அருகே உள்ள கே.லட்சுமிபுரம் காலனி தெரு பகுதியை சேர்ந்தவர் காளிராஜ் மகன் ஹரிபிரசாத் (வயது 16). இவர் கழுகுமலையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 கம்யூட்டர் சயின்ஸ் பிரிவில் படித்து வந்தார்.
நேற்று முன்தினம் அவர் மாலையில் பள்ளி முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக, அருகில் உள்ள காளவாசல் பஸ் நிறுத்தத்துக்கு வந்தார். அப்போது அந்த பகுதியில் அவரது பள்ளியில் பிளஸ்-1 அறிவியல் பிரிவில் படிக்கும் மாணவர் ஒருவருக்கும், கழுகுமலையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படிக்கும் மாணவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். அப்போது ஹரிபிரசாத் தனது பள்ளியில் படிக்கும் மாணவருக்கு ஆதரவாக பேசியதாக கூறப்படுகிறது. இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அங்கு வந்த ஆசிரியர்கள் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
வீடு புகுந்து தாக்குதல்
அதன்பிறகு ஹரிபிரசாத் கே.லட்சுமிபுரத்தில் உள்ள தனது வீட்டுக்கு சென்று விட்டார். இந்த நிலையில் இரவு 7 மணியளவில் மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 மர்மநபர்கள், ஹரிபிரசாத்தின் வீட்டுக்குள் புகுந்து அவரை சரமாரியாக தாக்கினர். பின்னர் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
தாக்குதலில் படுகாயம் அடைந்த ஹரிபிரசாத்தை அவரது உறவினர்கள் மீட்டு கழுகுமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
5 பேர் கைது
இதுகுறித்த புகாரின் பேரில், கழுகுமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, 2 கல்லூரி மாணவர்கள் உள்பட 5 பேரை கைது செய்தனர். அவர்கள் அனைவரும் 17, 18 வயது உடையவர்கள் ஆவர். இந்த சம்பவத்தில் மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர். சம்பவம் தொடர்பாக கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேஷ் விசாரணை நடத்தி வருகிறார்.
மாணவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில், வீடு புகுந்து பிளஸ்-1 மாணவர் தாக்கப்பட்ட சம்பவம் கழுகுமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.