மாற்றுத்திறனாளிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்


மாற்றுத்திறனாளிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்
x

மாற்றுத்திறனாளிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என சிறப்பு குறைதீர்வு கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை வைத்தனர்.

வேலூர்

மாற்றுத்திறனாளிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என சிறப்பு குறைதீர்வு கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை வைத்தனர்.

சிறப்பு குறைதீர்வு முகாம்

வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்வு முகாம் நேற்று நடந்தது. கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் சரவணன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் தெரிவித்த கோரிக்கைகள் விவரம் வருமாறு:-

வேலூர் புதிய பஸ் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு கடைகள் ஒதுக்க வேண்டும். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகள் மற்றும் வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் பலர் கடன் பெற்று தொழில் செய்து வருகின்றனர். அவர்களுக்கான கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்.

மேலும் ஊனத்திற்கு ஏற்ப பெற்று வரும் உதவித்தொகையை உயர்த்தி வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வேலைவாய்ப்புகள்

100 நாள் வேலை திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 மணி நேரம் வேலை உள்ளிட்ட சலுகைகள் கொண்டு வர அதற்கான ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

அரசு அலுவலங்களில் மாற்றுத்திறனாளிகள் நடப்பது சிரமமாக உள்ளது. எனவே அவர்கள் எளிதாக செல்லும் வகையில் சாய்வு தளம் அமைக்கப்பட வேண்டும். வேலை வாய்ப்புக்காக பலர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். தொழில் பயிற்சி பள்ளி அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதற்கு கலெக்டர் குமாரவேல்பாண்டியன் பதிலளித்து பேசுகையில், வேலூர் புதிய பஸ் நிலையத்தில் கடைகள் ஒதுக்கி தருவது தொடர்பாக மாநகராட்சிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அனுமதி கிடைக்கப்பெற்ற பின் கடைகள் ஒதுக்கப்படும். வீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் பட்டா கேட்பவர்களுக்கும் பட்டா வழங்கப்படும். மாற்றுத்திறனாளிக்கான கடன் தள்ளுபடி குறித்து அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். மேலும் உங்களது கோரிக்கைகள் குறித்து அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டு அதன் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

உபகரணங்கள்

அதைத்தொடர்ந்து 94 பயனாளிகளுக்கு ரூ.3 லட்சத்து 16 ஆயிரம் மதிப்புள்ள உதவி உபகரணங்களை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி உள்பட கலந்துகொண்டனர்.


Next Story