கொழுந்து விட்டு எரிந்து சாலையில் சென்ற லாரி


கொழுந்து விட்டு எரிந்து சாலையில் சென்ற லாரி
x
திருப்பூர்

-

உடுமலையில் கொழுந்து விட்டு எரியும் தீயுடன் சாலையில் சென்ற லாரியிலிருந்து தீயுடன் பஞ்சு மூட்டைகள் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கழிவுப்பஞ்சு

உடுமலையையடுத்த பொன்னேரி பகுதியிலிருந்து கழிவு பஞ்சுகளை ஏற்றிக் கொண்டு மலையாண்டிபட்டினம் பகுதியிலுள்ள நூற்பாலைக்கு நேற்று முன்தினம் இரவில் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக பஞ்சு மூட்டைகளில் மின் கம்பி உரசி தீப்பிடித்துள்ளது. இதுகுறித்து தெரியாத டிரைவர் வண்டியை தொடர்ந்து ஒட்டிக் கொண்டிருந்துள்ளார்.

அந்த லாரி உடுமலை அரசு கலைக்கல்லூரி அருகில் உள்ள வாய்க்கால் பகுதிக்கு அருகில் வரும் போது பஞ்சு மூட்டைகளில் பற்றிய தீ கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. மேலும் எரியும் நெருப்புடன் பஞ்சு மூட்டைகள் வழி நெடுகிலும் விழுந்து கொண்டே சென்றது. இதனால் சாலை முழுவதும் பல இடங்களில் நெருப்பு கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது.

எரிந்து சாம்பல்

இதனையடுத்து லாரியின் பின்புறம் தீ எரிவதை அறிந்த டிரைவர் வண்டியை சாலை ஓரத்தில் உள்ள நீர் நிரம்பிய பள்ளத்தில் விட்டுள்ளார். மேலும் உடுமலை தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் பெரும் போராட்டத்துக்குப் பிறகு பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.

அதற்குள் லாரியிலிருந்த கழிவுப் பஞ்சு முற்றிலும் எரிந்து சாம்பலானது. அத்துடன் லாரியின் பெரும்பகுதி தீயில் கருகி சேதமானது. கொழுந்து விட்டு எறிந்த தீயுடன் சாலையில் சென்ற லாரியிலிருந்து நெருப்பு மூட்டைகள் விழுந்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story