மாப்பிள்ளையூரணி ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய நல்வாழ்வு குழுமம் இயக்குனர் ஷில்பா பிரபாகர் சதீஷ் ஆய்வு
மாப்பிள்ளையூரணி ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய நல்வாழ்வு குழுமம் இயக்குனர் ஷில்பா பிரபாகர் சதீஷ் ஆய்வு நடத்தினார்.
மாப்பிள்ளையூரணி ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய நல்வாழ்வு குழுமம் இயக்குனர் ஷில்பா பிரபாகர் சதீஷ் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வு
தேசிய நலவாழ்வு குழுமம் இயக்குனர் ஷில்பா பிரபாகர் சதீஷ் நேற்று தூத்துக்குடிக்கு வந்தார். அவர் தூத்துக்குடி அருகே உள்ள மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்துக்கு உட்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம், மாநகராட்சிக்கு உட்பட்ட கணேஷ்நகர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி ஆகியவற்றில் தேசிய நலவாழ்வு குழுமம் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாப்பிள்ளையூரணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வரும் நோயாளிகளின் வருகைப்பதிவேடு, மருந்தகத்தில் வைக்கப்பட்டுள்ள மருந்துகளை பார்வையிட்டார். அவற்றில் பொறிக்கப்பட்டுள்ள தயாரித்த நாள், காலாவதி நாள் ஆகியவற்றை ஆய்வு செய்தார். சித்தா பிரிவு, கர்ப்பிணி பெண்கள் பிரிவு, ஸ்கேன் பரிசோதனை மையம், கழிப்பிடம், அவசர சிகிச்சைபிரிவு, கருப்பைவாய் மற்றும் மார்பக பரிசோதனை மையம் பதிவேடு, மருந்தகம், மருந்து கிடங்கு, பிரசவ அறை மற்றும் பிரசவபின் கவனிப்பு பிரிவு ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டதோடு அங்கு தொழுநோயாளிகளுக்கான விழிப்புணர்வு முகாமை பார்வையிட்டு நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்துகள் குறித்தும், சிகிச்சைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
விரைவாக...
இதைத் தொடர்ந்து தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் செயல்பட்டு வரும் அவசர சிகிச்சை மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். மேலும் நோயாளிகளுக்கு விரைவாக சிகிச்சை அளிக்கவும், உரிய நடவடிக்கை மேற்கொள்ள துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட கணேஷ்நகர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொற்றாநோய்களுக்கான சிகிச்சை வழங்கப்படுவதையும், சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் வருகைப் பதிவேடுகள் உள்ளிட்டவைகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது, சுகாதாரபணிகள் துணை இயக்குனர் பொற்செல்வன், இணை இயக்குனர் நலப்பணிகள் கற்பகம், இணை இயக்குனர் தேசியநலக்குழுமம் ம.கிருஷ்ணலீலா, மக்களை தேடி மருத்துவம் திட்ட சிறப்பு கண்காணிப்பாளர் எம்.மதுசூதனன், தூத்துக்குடி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை முதல்வர் சிவக்குமார், தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி செவிலியர் கல்லூரி முதல்வர் கலைவாணி, உதவி திட்ட மேலாளர் மருத்துவம் ஸ்ருதி, தூத்துக்குடி மாநகராட்சி நல அலுவலர் சு.அருண்குமார், மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தலைவர் சரவணக்குமார், மருத்துவ அலுவலர்கள் வி.கார்த்திக், ஆர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்.